வடபழனி முருக பெருமான் கோவிலில் வைகாசி விசாக தேரோட்டம் விமரிசை
சென்னை,வடபழனியில் உள்ள முருகப் பெருமான் கோவிலில், இந்த ஆண்டிற்கான வைகாசி விசாகப் பெருவிழா, கடந்த மாதம், 31ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. அன்று மாலை, யாக சாலை பூஜைகள் துவங்கின.விழாவின் ஐந்தாம் நாளான நேற்று முன்தினம், பஞ்சமூர்த்தி புறப்பாடு நடந்தது. வைகாசி பிரம்மோத்சவத்தின் பிரதான நாளான நேற்று, தேரோட்டம் நடந்தது.அதனால், நேற்று அதிகாலை நடை திறக்கப்பட்டு, கோ பூஜை, காலசந்தி பூஜைகள் நடந்தன. தொடர்ந்து யாக சாலை பூஜை, ஹோமங்கள் நடந்தன. பின், மஹா தீபராதனையுடன் ரக் ஷை சார்த்துதல், நவசந்தி பலி நடந்தது.இதனிடையே உற்சவர் வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் நடந்தது. காலை 6:20 மணிக்கு, உற்சவர் தேரில் எழுந்தருளினார்.காலை 6:30 மணிக்கு, ஏராளமான பக்தர்கள் இணைந்து தேர் வடம் பிடித்தனர். நான்கு மாட வீதிகளையும் தேரில் வலம் வந்த முருகப் பெருமான், பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.காலை 10:15 மணிக்கு தேர் நிலைக்கு வந்தது. அதைத் தொடர்ந்து, சுப்பிரமணிய சுவாமி தேரில் இருந்து ஆலயத்திற்கு பிரவேசித்தார். பின், உச்சிகால பூஜை நடந்தது. சுப்பிரமணிய சுவாமி தேரில் வீதி உலா வந்து அருள்பாலித்த களைப்பு நீங்க, இரவு 7:00 மணிக்கு ஒய்யாளி உற்சவம் நடந்தது.பிரம்மோத்சவத்தில், இன்று இரவு 7:00 மணிக்கு, குதிரை வாகன புறப்பாடு நடக்கிறது. நாளை இரவு வடபழனி முருகப் பெருமான் வீதி உலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.வைகாசி விசாகமான 9ம் தேதி காலை 9:00 மணிக்கு, வள்ளி, தேவசேனா சமேத சண்முகர் விதி உலா நடக்கிறது. காலை 10:00 மணிக்கு தீர்த்தவாரி உற்சவமும், கலசாபிஷேகமும் நடக்கிறது. மாலை 6:00 மணிக்கு திருக்கல்யாண உற்சவம், மயில் வாகனத்தில் புறப்பாடு நடக்கிறது.