உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / வண்டலுார் பூங்காவில் ஆன்லைன் நுழைவு கட்டணம் திடீர் முடிவு!: கவுன்டர் மூடியதால் பார்வையாளர்கள் கடும் ஏமாற்றம்

வண்டலுார் பூங்காவில் ஆன்லைன் நுழைவு கட்டணம் திடீர் முடிவு!: கவுன்டர் மூடியதால் பார்வையாளர்கள் கடும் ஏமாற்றம்

தாம்பரம்:வண்டலுார் உயிரியர் பூங்காவில், 'ஆன்லைன்' நுழைவு கட்டண முறை அமலுக்கு வந்துள்ளது. முறையான அறிவிப்பு இன்றி, நேரிடையான டிக்கெட் முறை ரத்து செய்யப்பட்டதால், ஏழை மற்றும் நடுத்தர மக்கள் ஏமாற்றம் அடைந்து, திரும்பி செல்கின்றனர்.நடுத்தர மற்றும் ஏழை மக்களின் சிறந்த பொழுதுபோக்கு இடமாக, வண்டலுார் உயிரியல் பூங்கா உள்ளது. பல்வேறு இடங்களில் இருந்து, குடும்பத்தினருடன் கூட்டம் கூட்டமாக வந்து, பூங்காவில் உள்ள, 2,400 விலங்குகளை கண்டு ரசித்து செல்கின்றனர்.வார நாட்களில், 2,500 முதல் 3,000 பேர் வரையிலும், விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில், 7,500 முதல் 9,000 வரையிலும் பார்வையாளர்கள் வந்து செல்கின்றனர். நுழைவு கட்டணமாக பெரியவர்களுக்கு - 90 ரூபாய், சிறியவர்களுக்கு 50 ரூபாய் வசூலிக்கப்பட்டு வந்தது.கடந்த 2023, செப்., 9 முதல், பெரியவர்களுக்கான நுழைவு கட்டணம், 200 ரூபாயாக உயர்த்தப்பட்டது. இந்த கட்டண உயர்வுக்கு பார்வையாளர்களிடம் எதிர்ப்பு எழுந்துள்ளது.இந்நிலையில், இப்பூங்காவில் நேரிடையான, கவுன்டர் கட்டண முறை ரத்து செய்து, 'ஆன்லைன்' கட்டண முறை அமலுக்கு வந்துள்ளது. பூங்காவிற்கு வரும் பார்வையாளர்கள், அங்குள்ள க்யூ.ஆர்., குறியீட்டை, 'ஸ்கேன்' செய்து, பெரியவர்கள் எத்தனை பேர்; சிறியவர்கள் எத்தனை பேர் என்பதை பதிவிட வேண்டும். பின், அதற்கான கட்டணத்தை, பணம் பரிமாற்ற செயலியான, 'ஜிபே, பேடிஎம்' வாயிலாக செலுத்த வேண்டும். பணம் செலுத்தியவுடன், பார்வையாளர்களின் மொபைல் போன் வாட்ஸாப் எண்ணிற்கு, டிக்கெட் அனுப்பப்படுகிறது. இந்த டிக்கெட்டை நுழைவு வாயிலில், ஸ்கேன் செய்து, பூங்கா உள்ளே செல்லலாம்.அதிகப்படியான பார்வையாளர்கள், குடும்பத்தினருடன் வரும் இப்பூங்காவில், முறையான அறிவிப்பு எதுவுமின்றி, அவசர அவசரமாக ஆன்லைன் டிக்கெட் முறை அமல்படுத்தப்பட்டு உள்ளதால், பயணியருக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது.பூங்காவிற்கு வரும் பார்வையாளர்களில் பலர், சாதாரண மொபைல் போன்களை பயன்படுத்துபவர்கள். அதில், வாட்ஸாப், ஜிபே போன்ற வசதி இருக்காது என்பதால், டிக்கெட் எடுக்க முடியாமல், ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். நேற்று, குடும்பத்தினருடன் வந்த ஏகப்பட்ட பார்வையாளர்கள், ஆன்லைன் டிக்கெட் எடுக்க முடியாமல், ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.ஏழை மற்றும் நடுத்தர மக்களே அதிகம் வந்து செல்லும் பூங்காவில், அனைவரும் ஸ்மார்ட் போன் வைத்திருப்பரா என்பதை பற்றி யோசிக்காமல், முறையான அறிவிப்பும் இன்றி, திடீரென ஆன்லைன் முறை அமல்படுத்தப்பட்டுள்ளது, பார்வையாளர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.ஆன்லைன் முறை அமல்படுத்தப்பட்டது வரவேற்கக்கூடிய விஷயம் என்றாலும், அந்த வசதி இல்லாத பார்வையாளர்களுக்காக, ஒரு டிக்கெட் கவுன்டரையோ அல்லது மாற்றுவழியையோ பூங்கா நிர்வாகம் கடைபிடிக்க வேண்டும் என்ற கோாரிக்கை எழுந்துள்ளது.பூங்கா பணியாளர்கள் கூறியதாவது:மூன்று மாதங்களுக்கு முன், டிக்கெட் கவுன்டரில் பணிபுரிந்த ஐந்து தினக்கூலி பணியாளர்களை, பணியில் இருந்து பூங்கா நிர்வாகம் நீக்கியது. இதுகுறித்து கேட்டதற்கு, டிக்கெட் வினியோகிப்பில் மோசடி செய்தார்கள் என்று காரணம் கூறப்பட்டது. டிக்கெட் கவுன்டர்களை, வனக்காப்பாளர், வனவர், வன சரக அலுவலர் ஆகியோர் கண்காணிக்கின்றனர். அவர்களை, உதவி இயக்குனர் கண்காணிக்கிறார். அப்படியிருக்கையில், இந்த அதிகாரிகள் யாரும், டிக்கெட் கவுன்டர்களை முறையாக கண்காணிக்கவில்லையா; மோசடி செய்ததாக தினக்கூலி பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுத்த நிர்வாகம், இதற்கு பொறுப்பான அதிகாரிகள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது, திடீரென ஆன்லைன் டிக்கெட் கட்டண நடைமுறையை அமல்படுத்தி உள்ளனர்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

யாருக்காக பூங்கா?

பூங்காவை சுற்றி பார்க்க, மனைவி, இரு பிள்ளைகளுடன் வந்தேன். 'கவுன்டரில் டிக்கெட் கிடையாது; ஆன்லைனில் டிக்கெட் எடுத்துக் கொள்ளுங்கள்' என்றனர். என்னிடம் இருப்பது சாதாரண போன்தான். எங்களை போன்ற நபர்களுக்கு வேறு வழியிருக்கிறதா என்று கேட்டேன். ஊழியர்களிடம் அதற்கு பதில் இல்லை. அங்கிருந்த பார்வையாளர்களிடம் உதவி கேட்டபோது, டிக்கெட் எடுத்து தர மறுத்துவிட்டனர். இதனால், வேறு வழியின்றி, விலங்குகளை காணாமல், ஏமாற்றத்தோடு வீடு திரும்பிவிட்டோம். வண்டலுார் பூங்கா ஏழை, நடுத்தர மக்களுக்காகவா அல்லது வசதி படைத்தவர்களுக்காகவா?- எஸ்.சுந்தர், 45,செங்கல்பட்டு.

பூங்காவில் டிக்கெட் கட்டண விபரம்

நுழைவு கட்டணம் ரூபாய்பெரியவர்கள் - 200சிறியவர்கள் - 50கேமரா - 350வீடியோ கேமரா - 750பேட்டரி வாகனம்பெரியவர்கள் - 150சிறியவர்கள் - 50லயன் சபாரி வாகனம்பெரியவர்கள் - 150சிறியவர்கள் - 30


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை