லாரியில் சிந்திய மண்ணால் விபத்தில் சிக்கிய வாகனங்கள்
அடையாறு, கிண்டியில் இருந்து அடையாறு நோக்கி செல்லும் சார்தார்பட்டேல் சாலை, போக்குவரத்து நெரிசல் மிக்கது. இந்த சாலையில், இரவு நேரத்தில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக பாரத்துடன் லாரியில் மண் ஏற்றி செல்லப்படுகிறது. நேற்றுமுன்தினம் நள்ளிரவு, அதிக பாரம் ஏற்றி லேசான வளைவு பகுதியில் அதிவேகமாக சென்ற லாரியில் இருந்து, மண் சாலையில் கொட்டியது. களிமண்ணாக இருந்ததால், சாலையில் ஒட்டிக் கொண்டது. இதனால், சாலை மேடு பள்ளமாக மாறி வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டனர். மழையும் பெய்ததால், மண்ணில் வழுக்கி இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கினர். நேற்றுகாலை, மாநகராட்சி உர்பேசர் சுமித் துாய்மை பணியாளர்கள், ஜே.சி.பி., வாகனம் கொண்டு மண்ணை சுரண்டி எடுத்து, சாலையை சுத்தம் செய்தனர். இந்த பணி, இரண்டு மணி நேரம் நடந்தது. இதன்பின், வாகனங்கள் சீராக சென்றன. அதிக பாரம் ஏற்றி செல்லும் வாகனங்கள் மீது, போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.