வேளச்சேரி பஸ் நிலைய புதுப்பிப்பு பணி சாலையை ஆக்கிரமித்து நடப்பதால் நெரிசல்
வேளச்சேரி, வேளச்சேரியில் சாலையை ஆக்கிரமித்து, பேருந்து நிலையம் மேம்படுத்தும் பணி நடப்பதால், வாகன நெரிசல் முன்பை விட அதிகரித்துள்ளது. வேளச்சேரி, விஜயநகர் பேருந்து நிலையத்தில் இருந்து, கோயம்பேடு, அம்பத்துார், பாரிமுனைக்கு நேரடி பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அதேபோல், பல்வேறு பகுதிகளில் இருந்து, மூன்று நிமிடத்திற்கு ஒரு பேருந்து வீதம், வேளச்சேரியை கடந்து செல்கிறது. இதனால், விஜயநகர் சந்திப்பில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படும். இரண்டடுக்கு மேம்பாலம் கட்டியும், நெரிசல் குறையவில்லை. வேளச்சேரி ரயில் நிலையம் அருகே, 6 ஏக்கர் இடம் பேருந்து நிலையம் கட்ட ஒதுக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், தற்போதைய பேருந்து நிலையம், 3 கோடி ரூபாயில் மேம்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக, ஏற்கனவே இருந்த இடத்தை விட, 2 மீட்டர் சாலையை ஆக்கிரமித்து கூரை அமைக்கப்படுகிறது. இதனால், வழக்கத்தை விட அதிகமாக நெரிசல் ஏற்பட்டுள்ளது. சிக்னல் இருந்தும், 'யு' டர்ன் செய்ய முடியாமல் வாகன ஓட்டிகள் மிகவும் பரிதவிக்கின்றனர். மாற்று இடம் இருந்தும், அதை பயன்படுத்தாமல், சாலையோரம் பேருந்து நிலையத்தை புதுப்பிப்பதற்கு, வேளச்சேரி மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது குறித்து, வேளச்சேரி பகுதி மக்கள் கூறியதாவது: அபார வளர்ச்சி அடைந்துள்ள வேளச்சேரி, கிண்டி, இ.சி.ஆர்., - ஓ.எம்.ஆர்., தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் முக்கிய வழித்தடமாக உள்ளது. வாகன நெரிசல் அதிகரிப்பதால், பேருந்து நிலையத்தின் பின் பகுதியில் உள்ள காலி இடத்தை பெற்று, அதில் பேருந்து நிலையம் அமைக்கலாம். அல்லது தரமணி சாலையில், 150 மீட்டர் துாரத்தில் உள்ள ஒரு ஏக்கர் அரசு இடத்திற்கு மாற்றலாம். இந்த இடத்தில் மேம்படுத்துவதால், எந்த பயனும் இல்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.