நிலம் கையகப்படுத்தும் பணி வெள்ளானுார் வாசிகள் எதிர்ப்பு
திருவள்ளூர், ஆவடி அருகில் 'சிப்காட்' தொழிற்சாலைக்கு நிலம் கையகப்படுத்துவதற்கு, வெள்ளானுார் கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.அவர்களை போலீசார் சமரசம் செய்து, கலெக்டரிடம் மனு அளிக்க ஏற்பாடு செய்தனர். அவர்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:ஆவடி தாலுகா வெள்ளானுார் கிராமத்தில், 488 ஏக்கர் நிலத்தை, 'சிப்காட்' தொழிற்பேட்டை அமைக்க, அதன் மேலாண்மை இயக்குனர், திருவள்ளூர் கலெக்டர் ஒப்புதல் பெற கடிதம் அனுப்பி உள்ளதாக தகவல் தெரியவந்துள்ளது. இதனால், கிராமவாசிகள் கடும் மன உளைச்சல் அடைந்துள்ளனர்.இப்பகுதியில், 10,000திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். மேலும், 'சிப்காட்' தொழிற்பேட்டைக்கு தேர்வு செய்த பகுதியில், 428 ஏக்கர் நிலம், கிராம மக்கள் பட்டா பெற்று வீடு கட்டி வசித்து வருகின்றனர்.மீதம் உள்ள 60 ஏக்கர் மட்டுமே அரசு புறம்போக்கு நிலம். இதில், குட்டை, வாய்க்கால், வண்டி பாதை, சாலை, மயானம் போன்ற வகைப்படுத்தப்பட்ட அரசு புறம்போக்கு நிலமே அதிகம் உள்ளது.எனவே, மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் இந்த இத்திட்டத்தை கவனமாக பரிசீலித்து, மக்களின் உணர்வுகளை கருத்தில் கொண்டு, ஒப்புதல் அளிக்க வேண்டாம் என, கேட்டுக் கொள்கிறோம்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டு உள்ளது.