தொழிலாளி போல கைவரிசை வேலுார் கொள்ளையன் கைது
குரோம்பேட்டை,குரோம்பேட்டை, சோழவரம் நகர், தந்தை பெரியார் தெருவை சேர்ந்தவர் சரவணகுமார், 35. இவர், கடந்த மாதம் 30ம் தேதி, வீட்டை பூட்டிவிட்டு, குடும்பத்தினருடன் புதுச்சேரிக்கு சென்றார்.மே 6ம் தேதி, சரவணகுமாரின் வீட்டின் முன்பக்க கிரில் கேட் உடைந்து இருப்பதாக, எதிர் வீட்டில் வசிப்போர் மொபைல் போன் வாயிலாக தகவல் தெரிவித்துள்ளனர்.இதையடுத்து, சரவணகுமார், மறுநாள் வந்து பார்த்துள்ளார். அப்போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த, 10 சவரன் நகை, வெள்ளி பொருட்கள் திருடு போனது தெரியவந்தது.இதுகுறித்து, குரோம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் சம்பவ இடத்தில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.அதில், முகமூடி, கையுறை, சாக்ஸ் மற்றும் தொப்பி அணிந்து வந்த மர்ம நபர், கைவரிசை காட்டியிருப்பது தெரியவந்தது.இதையடுத்து, இதுபோன்ற கொள்ளை சம்பவத்தில் ஈடுபடும் நபர்கள் குறித்த பட்டியலுடன் ஒப்பிட்டுப் பார்த்தனர்.அப்போது, வேலுார் மாவட்டத்தைச் சேர்ந்த கொள்ளையன் டிக்காராம், 25, நகை, வெள்ளி பொருட்களை கொள்ளையடித்தது தெரியவந்தது.இதையடுத்து, தனிப்படை போலீசார் நேற்று அவரை பிடித்து விசாரித்தனர். அப்போது, வேலுாரில் ஜோய் ஆலுக்காஸ் நகை கடையில் துளையிட்டு, 18 கிலோ தங்கத்தை திருடியதும், டிக்காராம் என்பது தெரிந்தது.கட்டட வேலை செய்யும் கூலி தொழிலாளி போல நடித்து, பூட்டியிருக்கும் வீடுகளை நோட்டமிட்டு, திருட்டு மற்றும் கொள்ளையில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது.கைரேகை பதியாமல் இருக்க, கையுறை அணிந்து, முகமூடி கொள்ளையனாக செயல்பட்டு வந்ததாகவும், டிக்காரம் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.அவரிடம் இருந்து, 7 சவரன் நகை, வெள்ளி பொருட்களையும், திருட்டு மற்றும் கொள்ளைக்கு பயன்படுத்திய கடப்பாரை, திருப்புலி, கையுறை உள்ளிட்டவற்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.