விஜயதசமியை முன்னிட்டு இன்று வடபழனியில் வித்யாரம்பம் நிகழ்ச்சி
சென்னை, வடபழனி ஆண்டவர் கோவிலில், நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு, சக்தி கொலு வைத்து கொண்டாடப்பட்டு வருகிறது.நவராத்திரி ஒன்பதாம் நாள் விழாவான நேற்று, காலை 11:00 மணி முதல் 11:30 மணி வரை; மாலை 6:00 மணி முதல் 6:30 மணி வரையிலும் சிறப்பு பூஜை, தீபாராதனை நடத்தப்பட்டது.சக்தி கொலுவில் அம்பாள், சரஸ்வதி அலங்காரத்தில் நேற்று, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மாலை, நிருத்தியம் நடனம் மற்றும் இசைப்பள்ளி மாணவர்களின் கச்சேரி நடந்தது. இரவு, மாஸ்டர் அபிநவ் மகேசின் பக்திப்பாடல்கள் பாடப்பட்டது. பின்னணி பாடகர் வேல்முருகனின் பக்தி இசைக் கச்சேரி நடந்தது.மேலும், அம்மன் கொலு சன்னிதியில், அம்பாளுக்கு ஏகதின லட்சார்ச்சனை நடந்தது. காலை 7:00 மணி முதல் மதியம் 12:30 மணி வரை; மாலை 4:30 மணி முதல் இரவு 8:30 மணி வரை, ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.விஜயதசமியை முன்னிட்டு, இன்று காலை 7:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரை வித்யாரம்பம் நிகழ்ச்சி நடக்கிறது. இதில், 2.5 முதல் 3.5 வயது வரை உள்ள இளம் தளிர்களின் பிஞ்சுவிரல் பிடித்து அவர்களின் தொடக்கக் கல்வியை ஆரம்பிக்கும் நிகழ்வு நடக்கிறது.