மெட்ரோ நுழைவாயிலில் அத்துமீறல்: பார்க்கிங் வசதி இருந்தும் அட்டூழியம்
திருமங்கலம்: அண்ணா நகர், இரண்டாவது அவென்யூவில், திருமங்கலம் மெட்ரோ ரயில் நிலையம் இயங்குகிறது. இந்நிலையத்தில் இடநெருக்கடி இருப்பதால், மெட்ரோ ரயிலுக்கு வரும் பயணியர், தங்கள் வாகனங்களை பிரதான சாலையான, இரண்டாவது அவென்யூவில் வரிசையாக நிறுத்தினர். இதுகுறித்து நம் நாளிதழில் செய்தி வெளியானதை அடுத்து, திருமங்கலம் நிலையத்தில் கூடுதலாக வாகனம் நிறுத்தும் வசதியை, மெட்ரோ நிர்வாகம் ஏற்படுத்தியது. எனினும் வழக்கம்போல், திருமங்கலம் மெட்ரோ ரயில் நுழைவாயிலில் இருசக்கரம் மற்றும் கார்கள் படையெடுத்து நிறுத்தப்படுகின்றன. திருமங்கலம் -அண்ணா நகர் ரவுண்டனா பகுதியில், எப்போதும் போக்குவரத்து நெரிசல் இருக்கும். இந்நிலையில், 40 அடி உடைய இச்சாலையில், இரு வரிசையாக இருசக்கர வாகனங்களை நிறுத்துவதால், 20 அடி சாலையாக சுருங்குகிறது. இதனால், கூடுதலாக போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதை தடுக்க வேண்டிய போலீசாரும் நடவடிக்கை எடுப்பதில்லை. போலீசாரும், மெட்ரோ நிர்வாகமும் இணைந்து, சாலையில் வாகனங்கள் நிறுத்துவதை தடுக்க உரிய நடவடிக்கை வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.