நிலம் கையகப்படுத்துவதில் தொடரும் இழுபறி வியாசர்பாடி - கணேசபுரம் மேம்பால பணி சுணக்கம்
வியாசர்பாடி, வியாசர்பாடி, அம்பேத்கர் கல்லுாரி நெடுஞ்சாலையில், ஜீவா ரயில் நிலையம் அருகே கணேசபுரம் சுரங்கப்பாதை உள்ளது. வியாசர்பாடி, கொளத்துார், மாதவரம், கொடுங்கையூர், கண்ணதாசன் நகர், மகாகவி பாரதியார் நகர், மூலக்கடை ஆகிய பகுதிகளுக்கு செல்வோர், வியாசர்பாடி - கணேசபுரம் ரயில்வே சுரங்கப்பாதையை கடந்து செல்ல வேண்டும். தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் இப்பகுதியில் சென்று வருகின்றன.ஆண்டுதோறும், மழைக் காலத்தில் வியாசர்பாடி, புளியந்தோப்பு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வெளியேறும் தண்ணீர், கணேசபுரம் சுரங்கப்பாதையில் தேங்கி, போக்குவரத்து தடைபடுவது வாடிக்கை.வாகன ஓட்டிகள் சுரங்கப்பாதையை பயன்படுத்த முடியாமல், மாற்றுப்பாதை வழியாக செல்ல வேண்டிய நிலை தொடர்கதையானது.இந்த பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், 142 கோடி ரூபாயில், கணேசபுரம் மேம்பாலம் கட்ட, சென்னை மாநகராட்சி ஒப்புதல் அளித்தது. பின், நிர்வாக காரணங்களால், மேம்பால கட்டுமான தொகை, 226 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டது.கணேசபுரம் ரயில்வே மேம்பாலம், சென்னை ஐ.ஐ.டி.,யின் அங்கீகாரத்துடன், 600 மீட்டர் நீளம், 15 மீட்டர் அகலத்திலும் கட்டப்படுகிறது. கட்டுமான பணிக்கான பூமி பூஜை, 2022ல் போடப்பட்டு, பணிகள் துவக்கப்பட்டன.புளியந்தோப்பு ஆட்டுத்தொட்டியில் இருந்து செல்லும்போது இரு வழி; வியாசர்பாடியில் இருந்து புளியந்தோப்புக்கு வரும்போது இரு வழி என, நான்கு வழி பாதையாக, இந்த மேம்பாலம் அமைக்கப்படுகிறது. ஆட்டுத்தொட்டியை அடுத்த கால்வாய் பகுதியில் இருந்து மேம்பாலம் துவங்கி, ரயில்வே சுரங்கப்பாதையை கடந்து, பெட்ரோல் 'பங்க்' வரை மேம்பால சாலை செல்கிறது.ரயில்வே ஒப்புதல் பெற்று, ரயில்வே பகுதியில் மட்டும், 58 மீட்டர் கட்டுமான பணி நடக்கிறது. இதற்காக, 45 அடி உயரத்திற்கு இரும்பு துாண்கள் அமைக்கப்படுகிறது. ரயில்வே சுரங்கப்பாதையை கடந்து, பெட்ரோல் பங்க் வரை உள்ள பகுதியில் கட்டுமான பணிகள் நடந்து வரும் நிலையில், மறுபுறம் பணிகள் துவக்கப்படவில்லை.இப்பகுதியில் நிலம் கையகப்படுத்தும் பணியில் சுணக்கம் ஏற்பட்டுள்ளதால், கட்டுமான பணிகள் ஆமை வேகத்தில் நகர்கிறது. கட்டுமான பணிகள் துவங்கி இரண்டு ஆண்டுகளாகியும், 30 சதவீத பணிகள்கூட இதுவரை முடியவில்லை. மேலும், மேம்பால பணியால் இப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால், பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்.மே மாதத்திற்குள் முடியும்மேம்பால பணிகள் ஒருபுறம் முடிந்த நிலையில், மற்றொருபுறம் நிலம் கையகப்படுத்தும் பணியால் பணிகள் தடைபட்டுள்ளன. நிலம் கையகப்படுத்தும் பணிகள் முடிந்ததும், குடிநீர், கழிவுநீர் குழாய்களை மாற்றி அமைத்து, பணிகள் விரைந்து முடிக்கப்படும். வரும் மே மாதத்திற்குள், பாலப்பணிகளை முடித்து, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளோம்.- மாநகராட்சி அதிகாரிகள்
போக்குவரத்து மாற்றம்
மேம்பால கட்டுமான பணி காரணமாக, ஸ்டீபன்சன் சாலை சந்திப்பு முதல் கணேசபுரம் சுரங்கப் பாதை வரையிலான சாலை தற்காலிகமாக மூடப்படும். நேற்று முதல் ஒரு வாரம் சோதனை அடிப்படையில் போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளது.மேல்பட்டி பொன்னப்பன் தெருவில் இருந்து புளியந்தோப்பு நோக்கி செல்லும் வாகனங்கள், ஸ்டீபன்சன் சாலை வழியாக திருப்பி விடப்படும்.மேலும், அவர்கள் ஏ.ஏ.சாலை, பெரம்பூர் நெடுஞ்சாலை, பெரம்பூர் மேம்பாலம், ஜமாலியா சாலை, குக்ஸ் சாலை சந்திப்பு, ஸ்டீபன்சன் சாலை, செங்கை சிவன் பாலம், டாக்டர் அம்பேத்கர் கல்லுாரி சாலை வழியாக புளியந்தோப்பை அடையலாம்.கணேசபுரம் சுரங்கப் பாதை வழியாக வியாசர்பாடி மற்றும் கொடுங்கையூர் நோக்கி செல்லும் வாகனங்கள், புளியந்தோப்பு நெடுஞ்சாலை, காந்தி ரவுண்டானா, பேசின் பாலம், வியாசர்பாடி புதிய பாலம், மார்க்கெட், முத்து தெரு, மூர்த்திகர் தெரு, எருக்கஞ்சேரி சாலை வழியாக அவர்கள் இலக்கை அடையலாம்.