9 நாற்காலிகளுடன் வார்டு கூட்டம்: மக்கள் புறக்கணிப்பு
மணலி: மணலியில் உரிய அறிவிப்பில்லாமல், ஒன்பது நாற்காலிகளுடன் நடந்த வார்டு கூட்டத்தை கண்டித்து, பலர் புறக்கணித்துள்ளனர். சென்னை மாநகராட்சியின் பல வார்டுகளில், நேற்று வார்டு கூட்டம் நடத்தப்பட்டது. அதன்படி, மணலி மண்டலம், 16வது வார்டில் சிறப்பு கூட்டம் நடந்தது. பத்து பேர் கூட அமர முடியாத வகையில், சிறிய அறையில் கூட்டம் நடத்தப்படுவதற்கு, மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், கடந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விளக்க வேண்டும். இக்கூட்டம் பற்றி முறையாக அறிவிப்பில்லை. இந்த கூட்டத்தை ரத்து செய்து விட்டு, பெரிய மண்டபத்தில் மக்கள் பங்கேற்கும் வகையில், முறையான அறிவிப்பு வழங்கி, கூட்டம் நடத்த வேண்டும் என, கோரிக்கை விடுத்தனர். கூட்டம் 10:00 மணிக்கு துவங்கிய நிலையில், தி.மு.க., கவுன்சிலர் ராஜேந்திரன் மற்றும் பிறதுறை அதிகாரிகள் யாரும், 12:00 மணி வரை வரவில்லை. இதனை கண்டித்து, கூட்டத்தில் பங்கேற்றவர்கள், அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின், கூட்டத்தை புறக்கணித்து வெளியேறினர். இது குறித்து, மணலிபுதுநகரைச் சேர்ந்த கா.ரஜினிகாந்த் கூறுகையில், ''சிறிய அறையில் ஒன்பது நாற்காலிகள் போட்டு, வார்டு கூட்டம் நடத்துகின்றனர். மணலிபுதுநகரிலிருந்து சடையங்குப்பம் வழியாக ஜோதி நகர் இணைப்பு சாலை அமைத்தல்; மெட்ரோ ரயில் மணலிபுதுநகர் வரை இயக்க வேண்டும் என்பது குறித்து பேச வந்தோம். கூட்டம் முறையாக நடத்தப்படாததால், புறக்கணித்து செல்கிறோம்,'' என்றார். திடீரென ஏற்பாடு செய்யப்பட வேண்டியிருந்ததால், வார்டு சிறப்பு கூட்டம் வார்டு அலுவலகத்தில் நடத்தப்பட்டது. சிறிய அறையில் நடத்துவது குறித்து சிலர் கேள்வி எழுப்பினர். வார்டில், சடையங்குப்பம், பர்மா நகர், இருளர் காலனி உள்ளிட்ட ஆறு இடங்களில், 2,000க்கும் மேற்பட்ட மக்களுக்கு உணவு வினியோகம் செய்ய வேண்டியிருந்தது. அதனால், கூட்டத்திற்கு வர தாமதமானது. - ராஜேந்திரன், தி.மு.க., கவுன்சிலர்.