அந்நிய படையெடுப்பாளர்கள் குறித்த சினிமாவை இலவசமாக பார்க்கலாம்
சென்னை, அந்நிய படையெடுப்பாளர்கள் குறித்த தகவல்கள் புகுத்தப்பட்டு, குழந்தைகள் மூளைச்சலவை செய்யப்படுவதாக வெளியான திரைப்படம், 'பாரதீய ஞான கேந்திரம்' அமைப்பின் சார்பில், மயிலாப்பூரில் உள்ள ஆர்.ஆர்., சபாவில் இன்று, இலவசமாக திரையிடப்படுகிறது. பாரதீய ஞானகேந்திரம் அமைப்பின் நிர்வாகிகள் கூறியதாவது: மன்பிரீத் சிங் தாமி எழுதி, இயக்கிய, 'ஹிஸ் ஸ்டோரி ஆப் இதிஹாஸ்' என்ற இந்த திரைப்படம் நாடு முழுதும் வரவேற்பை பெற்றது. ஆனாலும், சில காரணங்களால் பெரிதாக வசூல் செய்யவில்லை. இது போன்ற திரைப்படங்களை மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கும் நோக்கில், எங்கள் அமைப்பின் சார்பில், மயிலாப்பூர் ஆர்.ஆர்., சபாவில் நேற்று முன் தினம் திரையிடப்பட்டது. திரையரங்கு போல், மக்கள் கூட்டம் நிரம்பியது. இன்று மாலை 6:30 மணிக்கு மீண்டும் திரையிடப்படுகிறது. அனுமதி இலவசம். இவ்வாறு அவர்கள் கூறினர். இத்திரைப்படம் குறித்து, அதன் இயக்குநர் மன்பிரீத் சிங் தாமி கூறியதாவது: பள்ளிப் பாடங்களில் அந்நிய படையெடுப்பாளர்கள், வெள்ளையர்கள் குறித்த தகவல்களே அதிகம் புகுத்தப்பட்டு உள்ளன. அவர்களின் பெருமைகளை பேசுவதாகவே பெரும்பாலான பாடங்கள் அமைந்துள்ளன. மாறாக, நம் நாட்டு கலாசாரம், மன்னர்கள் குறித்த வரலாறுகள் திரிக்கப்பட்டுள்ளன. தவறுகளை சுட்டிக்காட்டி, அவற்றை மாற்றத் துடிக்கும் குழந்தையின் தந்தை கதாபாத்திரத்தை மையமாக வைத்து, இக்கதை உருவாக்கப்பட்டுள்ளது. இப்படம், விரைவில் ஓ.டி.டி.,யில் வெளியிடப்படும்; பிற மொழிகளிலும் மொழிபெயர்க்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.