போனது போச்சு... இனியாவது கவனமாக இருங்க கூடுதல் டி.ஜி.பி., அறிவுரை
சென்னை: 'கைதிகளுக்கு வாங்கும் மளிகை பொருட்கள் மற்றும் காய்கறி விலையில் கண்காணிப்பாளர்கள் கவனமாக இருக்க வேண்டும்' என, சிறைத் துறை கூடுதல் டி.ஜி.பி., மகேஷ்வர் தயாள் உத்தரவிட்டுள்ளார்.தமிழக சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளுக்கு, 'பேக்கிங்' செய்யப்பட்ட மளிகை பொருட்கள் மற்றும் காய்கறி, தமிழ்நாடு பனை மரம் மற்றும் நார் சந்தைப்படுத்துதல் கூட்டுறவு நிறுவனத்தில் இருந்து கொள்முதல் செய்யப்பட்டு வந்தது. இதன் விலை நிலவரம் குறித்து, சிறைத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது, தற்போதைய விலை, டி.சி.யு.எஸ்., எனப்படும் திருவல்லிக்கேணி நகர்ப்புற கூட்டுறவு சங்கம் மற்றும் பிற கூட்டுறவு சங்க கடைகளை விட, 58 சதவீதம் அதிகம் என, கண்டறியப்பட்டது. இதன் வாயிலாக, சிறைத் துறைக்கு ஆண்டுக்கு, 25 - 30 கோடி ரூபாய் வரை கூடுதலாக செலவாகி இருப்பதும் கண்டறியப்பட்டது.இதனால், சென்னை புழல் உள்ளிட்ட சிறைகளுக்கு, திருவல்லிக்கேணி நகர்ப்புற கூட்டுறவு சங்க நிறுவனத்திடம் இருந்தும், மற்ற சிறைகளுக்கு கூட்டுறவு சங்க கடைகளிலும் கொள்முதல் செய்ய உத்தரவிடப்பட்டது. இந்நிலையில், 'தேவையற்ற செலவுகளை குறைக்க வேண்டும். சிறைகளில் காய்கறிகள் விளைவிக்கப்படுகின்றன. கோழிப் பண்ணைகளும் பராமரிக்கப்பட்டு வருகின்றன. 'அதனால், போனது போச்சு, இனிமேலாவது தவறு நடக்காமல், சிறை கண்காணிப்பாளர்கள் கவனமாக இருக்க வேண்டும்' என, சிறைத் துறை கூடுதல் டி.ஜி.பி., மகேஷ்வர் தயாள் அறிவுறுத்தி உள்ளார்.