உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சிங்கார சென்னை பயண அட்டை புறநகர் ரயில்களில் அனுமதி எப்போது?

சிங்கார சென்னை பயண அட்டை புறநகர் ரயில்களில் அனுமதி எப்போது?

சென்னை, சிங்கார சென்னை' என்ற லேபிள் ஒட்டப்பட்ட அட்டையை பயன்படுத்தி, புறநகர் மின்சார ரயில்களிலும் பயணிக்கும் வசதி கொண்டுவர வேண்டுமென, பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.பேருந்து, ரயில், மெட்ரோ ரயிலில் கட்டணம் செலுத்தி பயணிக்க வசதியாக, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில், முதல் முறையாக, 2023 ஏப்ரலில், 'சிங்கார சென்னை அட்டை' என்று லேபிள் ஒட்டப்பட்ட, தேசிய பொது இயக்க அட்டை அறிமுகம் செய்யப்பட்டது. இதையடுத்து, சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில், கடந்த 6ம் தேதி அறிமுகம் செய்யப்பட்டது. இந்த அட்டையை மாநகர பேருந்துகள், மெட்ரோ ரயில்கள் உள்ளிட்ட பல போக்குவரத்து பரிவர்த்தனைகளுக்கு பயன்படுத்தலாம்.முதற்கட்டமாக, 50,000 அட்டைகள், எஸ்.பி.ஐ., வாயிலாக கட்டணமின்றி வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், இந்த புதிய அட்டையை இன்னும் சென்னை புறநகர் மின்சார ரயில்களில் பயன்படுத்தும் முறை கொண்டுவரப்படவில்லை.இதுகுறித்து, ரயில் பயணியர் சிலர் கூறியதாவது: சென்னை புறநகர் மின்சார ரயில்களில், தினமும் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயணம் செய்து வருகின்றனர். பயண துாரத்திற்கு ஏற்ப, 5, 10, 15 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. டிக்கெட் எடுக்க வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.பெரும்பாலான நேரங்களில் டிக்கெட் கவுன்டர்களில் சில்லரை பிரச்னையும் ஏற்படுகிறது.எனவே, பயணியர் வசதிக்காக, சிங்கார சென்னை அட்டையை, மின்சார ரயில்களில் பயணிக்கும் வகையில் அறிமுகம் செய்ய வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.சென்னை ரயில் கோட்ட அதிகாரிகள் கூறுகையில், 'யூ.டி.எஸ்., செயலி மற்றும் கியூ.ஆர்., கோடு வாயிலாக மின்சார ரயில் டிக்கெட் எடுக்கும் வசதி தற்போது உள்ளது. அடுத்தகட்டமாக, சிங்கார சென்னை அட்டை கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ