உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / அண்ணா சாலையில் தொடரும் நெரிசலுக்கு தீர்வு: ஒயிட்ஸ் சாலை இரு வழியாக மாறுது

அண்ணா சாலையில் தொடரும் நெரிசலுக்கு தீர்வு: ஒயிட்ஸ் சாலை இரு வழியாக மாறுது

- நமதுநிருபர் - சென்னையின் பிரதான சாலையான அண்ணா சாலையில், ஆயிரம் விளக்கு பகுதியில் தொடரும் போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில், வாகன போக்குவரத்தில் போலீசார் சில மாற்றங்களை அமல்படுத்தப்பட உள்ளனர். சென்னையில் வாகனங்களின் பெருக்கத்திற்கேற்ப சாலை கட்டமைப்பு வசதி இல்லை. இதனால், இருக்கும் சாலைகளிலேயே பல்வேறு மாற்றங்களையும், மேம்பாலங்கள் அமைத்தும், நெரிசலை குறைக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும், அண்ணா சாலை ஆயிரம் விளக்கு பகுதியில் போக்கு வரத்து பிரச்னை பெரிதாகி வாகன ஓட்டிகள் திணறி வருகின்றனர். இதற்கு தீர்வு காணும் வகையில், போக்குவரத்தில் சில மாற்றங்களை போலீசார் அமல்படுத்த உள்ளனர். இதுகுறித்து, போக்கு வரத்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது: அண்ணாசாலையில், ஆயிரம் விளக்கு பகுதியில் நெரிசல் அதிகரித்து வருவதற்கான காரணம் குறித்து, கள ஆய்வு மேற் கொண்டோம். அதன்படி, கிரீம்ஸ் சாலையில் இருந்து தேனாம்பேட்டை நோக்கி செல்லும் வாகனங்களுக்கு, அண்ணசாலை, ஒயிட்ஸ் சாலை சந்திப்பில், 'யு - டர்ன்' வழங்கப்பட்டுள்ளது. இருவழி சாலையில் ஒருபுறம் 12 மீட்டர், மறுபுறம் 13 மீட்டர் மட்டுமே யு - டர்ன் வசதி இருந்தது. இதனால், அண்ணா சாலையில் வாகனங்கள் அணி வகுத்து நிற்கின்றன. எனவே, அண்ணாசாலை - ஒயிட்ஸ் சாலை சந்திப்பில் வழங்கப்பட்டுள்ள யு - டர்ன் வசதியை ரத்து செய்துவிட்டு, ஐ.ஓ.பி., வங்கி அருகே, யு - டர்ன் செய்யும் வகையில் மாற்றம் செய்யப்பட உள்ளது. இந்த பகுதியில், ஒருபுறம், 15.2 மீட்டரும் மறுபுறம், 14.5 மீட்டரும் யு - டர்ன் செய்ய வசதி உள்ளன. இதனால் எளிதாக வாகனங்கள் திரும்பி செல்ல முடியும். சத்தியம் திரையரங்கம் செல்வோர், ஐ.ஓ.பி., அருகே யு - டர்ன் செய்து, திரு.வி.க., சாலை வழியாக சென்று, ஒயிட்ஸ் சாலையில் இடதுபுறம் திரும்பி செல்லலாம். ஒயிட்ஸ் சாலையில் மெட்ரோ ரயில் பணிகள் முடிந்ததை அடுத்து போக்குவரத்திற்காக திறக்கப்பட உள்ளது. ஒயிட்ஸ் சாலை - திரு.வி.க., சந்திப்பில் மெட்ரோ பணி மேற்கொள்ளப்பட உள்ளதால், அச்சாலை தற்காலிகமாக மூடப்பட உள்ளன. ஒயிட்ஸ் சாலை இருவழி போக்குவரத்து அமல்படுத்தப்பட்டால், அண்ணா சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாது. இதற்கான முதற்கட்ட சோதனை, வரும் வெள்ளிக்கிழமை அன்று மேற்கொள்ளப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி