சிறுமி அளித்த வாக்குமூலம் ஆடியோ வெளியிட்டது யார்? ஐகோர்ட் கேள்வி
சென்னை, 'சிறுமியின் வாக்குமூலத்தின் ஆடியோவை வெளியிட்டது யாராக இருந்தாலும், அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்' என, சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.சென்னை அண்ணா நகரைச் சேர்ந்த 10 வயது சிறுமியை, பக்கத்து வீட்டில் வசிக்கும் வாலிபர், பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து, பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர், வாலிபருக்கு எதிராக அண்ணா நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கச் சென்றனர். அப்போது, தங்களை இன்ஸ்பெக்டர் தாக்கியதாகவும், வாலிபரின் பெயரை புகாரில் இருந்து நீக்க வற்புறுத்தியதாகவும், பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் பேசியதாக வீடியோ வெளியானது. இது தொடர்பாக, உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சூர்யபிரகாசம் முறையீடு செய்தார்.இதையடுத்து, தாமாக முன்வந்து எடுத்த வழக்கை, நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது.இந்த வழக்கு, நேற்று நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், என்.மாலா அடங்கிய அமர்வுமுன் விசாரணைக்கு வந்தது. இன்ஸ்., மாற்றம்
மாநில தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா ஆஜராகி கூறியதாவது:பாதிக்கப்பட்ட சிறுமி, தற்போது பெற்றோருடன்தான் உள்ளார். சட்ட விரோதமாக யாருடைய பிடியிலும் இல்லை என்பதால், ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்தது அல்ல.புலன் விசாரணையில் தவறு இருந்தாலும், அதுதொடர்பான வழக்கை இந்த அமர்வு விசாரிக்க அதிகாரம் இல்லை. வேறு அமர்வுதான் விசாரிக்க முடியும். போலீசார், தங்களை மிரட்டுவதாகவும், குடியிருக்கக்கூட வீடு இல்லை எனவும் சிறுமியின் பெற்றோர் கூறுவது உண்மையானால், அவர்களை அரசு பாதுகாக்கும். புகார் கொடுத்த பெற்றோருக்கு நம்பிக்கை ஏற்படும் விதமாக, குற்றச்சாட்டுக்கு ஆளான அண்ணா நகர் மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். எனவே, இந்த வழக்கை, நீதிபதி அறையில் ரகசிய விசாரணையாக விசாரிக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார். போலீஸ் தரப்பு பதில் மனுவையும், அவர் தாக்கல் செய்தார்.இதை ஏற்ற நீதிபதிகள், 'சிறுமியின் பெற்றோர் தரப்பில் பதிலளிக்க வேண்டும்' என தெரிவித்து, அக்.,1ம் தேதிக்கு வழக்கை தள்ளிவைத்து உத்தரவிட்டனர்.மேலும், 'சிறுமியின் வாக்குமூலத்தின் ஆடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டது யார்?' என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு, மனுதாரர் தரப்பில், 'அண்ணா நகர் மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர்தான் வாக்குமூலத்தை பதிவு செய்தார். அவர் மீது சந்தேகம் உள்ளது' என, தெரிவிக்கப்பட்டது. அதற்கு, 'யார் செய்திருந்தாலும், அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்' என வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா உறுதி அளித்தார்.