பொன்னியம்மன் மேடு மயான பூமி பணி முடிந்தும் திறக்காதது ஏன்?
மாதவரம், மாதவரம் மண்டலத்திற்குட்பட்ட பொன்னியம்மன் மேடு பகுதியில் உள்ள சுடுகாடு மூன்று ஆண்டுகளாக நவீனமயமாக்கலுக்காக மூடப்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் இறப்பு காரியங்களுக்காக, பெரம்பூர், திரு.வி.க.நகர், மாதவரம் என ஐந்து கி.மீ., துாரம் செல்ல வேண்டி உள்ளது.இதுகுறித்து மாதவரம் குடியிருப்போர் நலச்சங்க கூட்டமைப்பு செயலர் கோதண்டன் கூறியதாவது:இந்த சுடுகாடு 100 ஆண்டு பழமையானது. வசதிகளை மேம்படுத்த மூன்று ஆண்டுகளுக்கு முன் பணி துவங்கியது. ஆனால் அங்கு மக்கும் உரம் தயாரிப்பு வேலைகளை மாநகராட்சி செய்து வருகிறது. அதனால் அக்கம் பக்கத்து குடியிருப்பில் புழு, பூச்சிகளின் தொல்லை அதிகரித்தது. இதுகுறித்து நாங்கள் புகார் அளித்தோம். சுடுகாடு மேம்பாட்டு பணி செய்யாமல் மற்ற பணிகளை செய்வது ஏன்? என கேள்வி எழுப்பினோம். இதையடுத்து, 2024 ஜனவரியில் சுடுகாட்டு நவீனமயமாக்கல் பணி 1.5 கோடி ரூபாய் செலவில் துவங்கியது. அனைத்து பணிகளும் முடிந்து விட்டன. ஆனால் சாலை போடும் பணியை மட்டும் காலம் தாழ்த்தி வருகின்றனர். இதுகுறித்து மாதவரம் மண்டல மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்ட போது, சுடுகாட்டு திறப்பு விழாவுக்கு தேதி முடிவாகவில்லை. அதனால் பணி மெதுவாக செய்வதாக கூறினர். நாம் காத்திருக்க முடியும். இறந்தவர்களின் சடலம் காத்திருக்குமா?இவ்வாறு அவர் கூறினார்.