தவறான சிகிச்சையால் மனைவி உயிரிழப்பு? மருத்துவமனைமீது போலீசில் கணவர் புகார்
மதுரவாயல், தவறான சிகிச்சையால்தான் மனைவி இறந்தார் என, தனியார் மருத்துவமனை மீது, கணவர் அளித்த புகார் குறித்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.அம்பத்துார் பாடிக்குப்பம், விநாயகர் தெருவை சேர்ந்தவர் மோகன், 45. இவர், துணிகளுக்கு இஸ்திரி செய்யும் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி நாகபூசுனாவுக்கு, 36, சில மாதங்களாக உடல் நலம் பாதிப்பு இருந்தது.இதையடுத்து, மதுரவாயல் அடையாளம்பட்டு பகுதியில் உள்ள லலிதாம்பிகை மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு சென்றார். பரிசோதனையில் அவரது கர்ப்பப்பையில் கட்டி இருப்பது தெரியவந்தது.அறுவை சிகிச்சை செய்து கட்டியை அகற்ற, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.நேற்று முன்தினம் அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய தயார் படுத்தியபோது, திடீரென இருதய துடிப்பு குறைந்தது.மருத்துவமனை நிர்வாக அறிவுரைப்படி, ஆம்புலன்ஸ் வாயிலாக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு, நாகபூசனத்தை கொண்டு சென்றனர். பரிசோதித்த மருத்துவர்கள், வரும் வழியிலேயே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். தவறான சிகிச்சையால்தான் மனைவி இறந்ததாக, மருத்துவமனை மீது மோகன் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து, வானகரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.