உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ஆறுவழி சாலையாகுமா சர்தார் படேல் சாலை? சாத்தியக்கூறுகளை ஆராய அமைச்சர் உத்தரவு!

ஆறுவழி சாலையாகுமா சர்தார் படேல் சாலை? சாத்தியக்கூறுகளை ஆராய அமைச்சர் உத்தரவு!

சென்னை, போக்குவரத்து நெரிசல் மிகுந்த சர்தார் படேல் சாலையை, ஆறு வழியாக விரிவாக்கம் செய்வதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்வதற்கு, நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் வேலு உத்தரவிட்டுள்ளார். சர்தார் படேல் சாலையில், காந்தி மண்டபம் சந்திப்பு முதல் ஜி.எஸ்.டி., சாலை சந்திப்பு வரை, சென்னை ஐ.ஐ.டி., அண்ணா பல்கலைக்கழகம், அழகப்பா பல்கலைக்கழகம் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் உள்ளன. மேலும், பல்வேறு அரசு அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. கிண்டியில் இருந்து அடையாறு, திருவான்மியூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்வோர், இந்த சாலையை அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். இச்சாலையில், காலை முதல் நள்ளிரவு கடந்தும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. பீக் ஹவர் எனப்படும் அலுவலக நேரங்களில், வாகனங்கள் ஊர்ந்து செல்ல வேண்டிய நிலை நீடித்து வருகிறது. இப்பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், நெடுஞ்சாலைத்துறை வாயிலாக, சர்தார் படேல் சாலையையும், ராஜிவ்காந்தி சாலையையும் இணைக்கும் வகையில், மத்திய கைலாஷ் சந்திப்பில், 'எல்' வடிவ மேம் பாலம் கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன. இதற்காக, 60.9 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது. இப்பணிகளை, நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் வேலு, நேற்று ஆய்வு செய்தார். அப்போது அதிகாரிகளிடம் அவர் கூறியதாவது: படேல் சாலையில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாத வகையில், மேம்பால பணிகளை விரைவுபடுத்த வேண்டும். அக்டோபர் 31ம் தேதிக்குள் கட்டுமான பணிகளை முடிக்க வேண்டும். காந்தி மண்டபம் முதல் ஜி.எஸ்.டி., சாலை வரை, போக்குவரத்து நெரிசலை குறைக்க வேண்டும். தற்போதுள்ள நான்கு வழித்தட சாலையை, ஆறு வழித்தடமாக விரிவாக்கம் செய்ய வேண்டும். அதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்து அறிக்கை அளிக்கவேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இந்த ஆய்வின்போது, நெடுஞ்சாலைத்துறை தலைமை பொறியாளர் சத்தியபிரகாஷ், கண்காணிப்பு பொறியாளர் ஜவஹர் முத்துராஜ், சென்னை கண்காணிப்பு பொறியாளர் சரவணசெல்வம், கோட்ட பொறியாளர் சந்திரசேகரன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை