வடபழனி ஆண்டவர் கோவிலை சுற்றியுள்ள மாடவீதிகளில், புற்றீசலாக முளைத்து வரும் ஆக்கிரமிப்புகளை அகற்ற மாநகராட்சி கமிஷனர் தனிகவனம் செலுத்த வேண்டும் என, கோரிக்கை வலுத்துள்ளது.சென்னையில் மிகவும்பிரசித்தி பெற்றது, நுாற்றாண்டு பழமை வாய்ந்த வடபழனி ஆண்டவர் கோவில். தினந்தோறும்நுாற்றுக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்கின்றனர். தற்போது, கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு, தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இன்று சூரசம்ஹாரம், அடுத்த நாள் திருக்கல்யாணம் நடப்பதால், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கூடுவர்.ஆற்காடு சாலையில் இருந்து, கோவில் முகப்பிற்கு செல்லும் பிரதான சாலையாக ஆண்டவர் தெரு உள்ளது. இந்த தெருவின் இருபுறமுள்ள கடைகளால், நடைபாதை மற்றும்சாலை முழுமையாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.அங்கு வரும் வாடிக்கையாளர்களின் வாகனங்கள், சாலையில் நிற்பதால் பக்தர்கள் கோவில் நுழைவாயிலை அடையவே முடியாத நிலை ஏற்படுகிறது. கந்தசஷ்டி விழா நடப்பதால் ஏராளமான நடைபாதை கடைகள் முளைத்துள்ளன.தெற்கு, வடக்கு மாடவீதிகளிலும் புற்றீசலாக முளைத்துள்ள நடைபாதை கடைகளின் ஆக்கிரமிப்பு மற்றும் வாகனங்களின் ஆக்கிரமிப்பு காரணமாக, பக்தர்களால் நடந்து செல்லவே முடியாத நிலை ஏற்பட்டது. இதற்கு ஆளுங் கட்சியினர் ஆசி இருப்பதால், ஆக்கிரமிப்பாளர்கள் அசைந்து கொடுப்பதாக இல்லை.மன அமைதிக்காக, நிம்மதியாக சுவாமி தரிசனம் செய்து, தங்களின் மனக்குறையை போக்க வரும் பக்தர்கள், கோவிலுக்கு நுழைந்து, வெளியே செல்வதற்குள் பல்வேறு இன்னல்களையும் அனுபவித்து, மனச்சுமையுடன் திரும்புகின்றனர்.ஒரு சில நேரம், ஏன் கோவிலுக்கு வருகிறோம் என்ற விரக்தி ஏற்படும் அளவிற்கு, மாடவீதி நடைபாதை ஆக்கிரமிப்பாளர்களின் செயல்பாடு உள்ளதாக பக்தர்கள் புலம்பித் தீர்க்கின்றனர்.இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண, மாநகராட்சி கமிஷனர் தனிகவனம் செலுத்த வேண்டும் என்பது பக்தர்களின் கோரிக்கை. கந்த சஷ்டி விழாவை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு வசதியை ஏற்படுத்தும் வகையில், காவல் துறையினர் சிறப்பு கவனம் செலுத்தி, ஆக்கிரமிப்புகளை அதிரடியாக அகற்ற வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. -- நமது நிருபர் ---