திருவொற்றியூர், திருவொற்றியூர் மண்டலத்தில், 14 வார்டுகளில் 3.50 லட்சம் பேர் வசிக்கின்றனர். இங்கு, பெரும்பாலான மனைகளில் வீடுகள் கட்டப்பட்டு விட்டன. சில மனைகள் மட்டும் காலியாக உள்ளன.இந்த நிலையில், சென்னையில் சமீபமாக பெய்து வரும் பரவலான மழையால், காலிமனைகளில் மழைநீர் தேங்குகிறது. இந்த மனைகள், சாலை மட்டத்தை காட்டிலும் மிக தாழ்வாக உள்ளது. இதனால், மழைநீர் வெளியேற முடியாமல் தேங்கி விடுகிறது.தேங்கும் மழைநீரில் கொசுப்புழுக்கள் உருவாகாத வண்ணம், 'ஆயில்' பந்துகள் வீசப்படுகின்றன. இருப்பினும், கொசுக்கள் உற்பத்தியை தடுக்க முடியவில்லை. குறிப்பாக திருவொற்றியூர் மேற்கு பகுதிகளான, 4 , 6, 7 ஆகிய வார்டுகளில் இந்த நிலைமை தொடர்கிறது.எனவே, வடகிழக்கு பருவமழைக்கு முன்னதாக, மழைநீர் தேங்கும் காலி மனைகளை மாநகராட்சி அதிகாரிகள் கணக்கெடுக்க வேண்டும். இந்த மனைகளின் உரிமையாளர்களை தொடர்பு கொண்டு, மழைநீர் தேங்காதபடி, மண், கட்டட இடிபாடுகளை கொட்டி மேடேற்ற அறிவுறுத்த வேண்டும். தற்போது, 'டெங்கு, ப்ளூ' உள்ளிட்ட காய்ச்சல் பாதிப்புகள் அதிகரித்தபடி உள்ளதால், விரைந்து நடவடிக்கை எடுக்க மாநகராட்சி அதிகாரிகள் முன்வர வேண்டும் என, கோரிக்கை வலுத்துள்ளது.