சாலைகளில் பேட்ச் ஒர்க் துவக்கம் பருவமழைக்கு தாக்கு பிடிக்குமா?
சென்னை: மழை ஓய்ந்துள்ள நிலையில், சென்னையில் சேதமான சாலைகளில் ஒட்டுபோடும் பணிகளை, நெடுஞ்சாலைத்துறை துவங்கியுள்ளது. சென்னையில் பெரும்பாலான சாலைகள், மாநகராட்சி பராமரிப்பிலும், 250 கி.மீ., சாலைகளை, மாநில நெடுஞ்சாலைத் துறை பராமரிப்பிலும் உள்ளன. மெட்ரோ ரயில் பணிகள் நடந்துவரும் சாலைகள், அந்நிறுவன கட்டுப்பாட்டில் உள்ளன. அவதி மெட்ரோ ரயில் நிறுவனம், சாலைகளை முறையாக பராமரிக்காததால், பல சாலைகள் குண்டும் குழியுமாக மாறி, வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வந்தனர். இதையடுத்து, சீரமைப்பு பணிக்காக மெட்ரோ ரயில்வே நிறுவனம், 300 கோடி ரூபாயை, மாநில நெடுஞ்சாலைத்துறையிடம் அளித்தது. இந்த நிதியில், சாலைகள் சீரமைக்கும் பணிகள் செப்டம்பரில் துவங்கப்பட்டன. அக்டோபரில் வடகிழக்கு பருவமழை துவங்கியதால் சீரமைக்கப்பட்ட சாலைகள், குறுகிய காலத்தில் சேதமடைந்தன. மழையால் பல இடங்களில் சாலை போடும் பணிகளும் முடங்கின. சீரமைப்பு சென்னையில் மழை நின்று, வெயில் தலைகாட்ட துவங்கியுள்ளதால், சேதமடைந்த சாலைகளை சீரமைக்கும் பணிகளை, நெடுஞ்சாலைத் துறை துவங்கியுள்ளது. அதேபோல், சென்னை மாநகராட்சியும் பல்வேறு சாலைகளில், 'பேட்ச் ஒர்க்' செய்ய துவங்கியுள்ளது. இப்போது மேற்கொள்ளும் ஒட்டு வேலை பணிகளாவது, பருவ மழையை தாக்குப்பிடிக்கும் வகையில் அமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஒரு மூட்டை 350 ரூபாய்
நெடுஞ்சாலைத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: மழையாலும், மெட்ரோ ரயில் பணியாலும் சேதமடைந்த சாலைகளை சீரமைக்கும் பணிகளை, மூன்று நாட்களில் முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. பல சாலைகளில் நள்ளிரவுக்கு பின்தான் பணிகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. பருவமழை ஓய்ந்தபின், சாலை முழுதும் புதுப்பிக்கும் பணிகள் ஜனவரி மாதம் துவங்கும். பருவமழையால் ஏற்படும் பள்ளங்களை நிரப்ப, 'ரெடிமேட்' தார் கலவைகளை பயன்படுத்தப்பட உள்ளன. தேவையான தார் கலவை மூட்டைகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இந்த தார்க்கலவையை பள்ளங்களில் கொட்டினால் போதும்; 'ரோலர்' ஓட்ட வேண்டிய அவசியம் இல்லை. வாகன போக்குவரத்தின்போது 'செட்டில்' ஆகிவிடும். ஒரு மூட்டையின் விலை 350 ரூபாய். விலை அதிகம் என்பதால், அவசிய தேவைக்கேற்ப அவற்றை பயன்படுத்த திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.