ரயில் பயணியிடம் பிக் பாக்கெட் பெண் கைது
பெரம்பூர்:செங்குன்றம், பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் கஸ்துாரி, 30. இவர், நேற்று முன்தினம் இரவு திருநின்றவூரில் இருந்து சென்ட்ரலுக்கு, மின்சார ரயிலில் பயணம் செய்தார். அதே பெட்டியில் பயணித்த பெண் ஒருவர், கஸ்துாரியின் கைப்பையில் இருந்த, 6,000 ரூபாயை திருடியுள்ளார். இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த கஸ்துாரி கூச்சலிட்டுள்ளார். சக பயணியர் அப்பெண்ணை பிடித்து, சென்ட்ரல் ரயில்வே போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவர்கள், பெரம்பூர் ரயில்வே போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசாரின் விசாரணையில், அப்பெண் திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஜெயந்தி, 45, என தெரிந்தது. 6,000 ரூபாயை மீட்ட போலீசார், அப்பெண்ணிடம் விசாரிக்கின்றனர்.