தி.நகர் அடுக்குமாடி குடியிருப்பில் மர்மமாக இறந்து கிடந்த பெண் *கற்பழித்து கொலையா என விசாரணை
சென்னை, தி.நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் கழிப்பறையில், வீட்டு வேலை செய்யும் பெண் அரை நிர்வாணமாக, வாயில் நுரை தள்ளியபடி இறந்து கிடந்தார். பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டரா என்ற கோணத்தில் போலீசார் விசாரிக்கின்றனர்.சென்னை, தேனாம்பேட்டை ஆலயம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் விஜயா, 45. இவர், பாண்டி பஜார் தியாகராயர் சாலையில் உள்ள வணிக வளாகம் ஒன்றில், 'ஹவுஸ் கீப்பிங்' வேலை செய்து வந்தார்.அவருக்கு, தி.நகர் நானா தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில், காவலாளியாக வேலை செய்து வரும், விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த வீரபத்திரன்,58 என்பவரின் அறிமுகம் கிடைத்துள்ளது.அவரிடம், யாராவது வீட்டு வேலைக்கு ஆட்கள் கேட்டால் தெரிவிக்குமாறு, தன் மொபைல் போன் எண்ணை கொடுத்துள்ளார்.அதன்படி, நான் வேலை பார்க்கும் அடுக்குமாடி குடியிருப்பில், முதல் தளத்தில் வசித்து வரும் வடிவேல் வீட்டை சுத்தம் செய்ய வருமாறு, கடந்த, 22ம் தேதி காலை, விஜயாவின் மொபைல் போன் எண்ணிற்கு தொடர்பு கொண்டுள்ளார்.இதையடுத்து, அன்று காலை, மருமகள் கண்மணியுடன், வீரபத்திரன் அழைத்த தி.நகர் நானா தெருவில் உள்ள வீட்டிற்கு விஜயா சென்றுள்ளார். அங்கு வேலையை முடித்து மதியம், 12:30 மணியளவில் விஜயா, தான் ஏற்கனவே வேலை பார்க்கும் பாண்டிபஜார் தியாகராயர் சாலையில் உள்ள, வணிக வளாகத்திற்கு சென்றுவிட்டார். அவரது மருமகள் கண்மணி, தேனாம்பேட்டையில் உள்ள வீடு ஒன்றுக்கும் பணிக்கு சென்றுவிட்டார்.இந்நிலையில், அன்று மாலையில் வீரபத்திரன் வேலை பார்க்கும் அடுக்குமாடி குடியிருப்பின் தரை தளத்தில் உள்ள கழிப்பறை ஒன்றில், அரை நிர்வாண கோலத்தில் விஜயா, மர்மான முறையில் இறந்து கிடந்துள்ளார்.மாம்பலம் போலீசார் அவரது உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனை செய்து, அவரது உறவினர்களிடம் ஒப்படைத்தனர். அவர், இறந்து கிடந்த விதம் உறவினர்களுக்கு சந்தேகத்தை எழுப்பி உள்ளது. இதனால் தீவிர விசாரணை நடத்த வேண்டும் என, மாம்பலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதனால், போலீசார் மர்ம மரணம் என, வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:வீரபத்திரன் வேலை பார்க்கும் அடுக்குமாடி குடியிருப்பின் தரை தளத்தில் கடைகள் உள்ளன. அங்குள்ள கழிப்பறை ஒன்றில், மேலாடை இன்றி அரை நிர்வாண கோலத்தில் விஜயா இறந்து கிடந்தார். அவர் தன் மகனிடம், வடிவேல் வீட்டில் காய்கறி நறுக்கும் வேலை இருப்பதாக கூறியுள்ளார். ஆனால் வடிவேல் வீட்டார், அவரை மீண்டும் வேலைக்கு அழைக்கவே இல்லை. எதற்காக அந்த அடுக்குமாடி குடியிருப்பின் கழிப்பறைக்கு சென்றார் என்பது மர்மமாக உள்ளது. அவர் இறந்து கிடந்த விதமும் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. கழிப்பறையும் உள்பக்கம் பூட்டப்படவில்லை. அவர் இறந்து கிடந்ததை வீரபத்திரன் தான் முதலில் பார்த்துள்ளார். ஆனால், தனக்கு விஜயா இந்த இடத்திற்கு வந்தது தெரியாது என்கிறார். விஜயாவுக்கு வலிப்பு நோய் பாதிப்பும் இருந்துள்ளது.வாயில் நுரை தள்ளியபடி தான் இறந்து கிடந்தார். அவரின் உடல்களிலும் காயங்கள் இல்லை. எனினும் மர்ம மரணம் என, வழக்குப்பதிவு செய்து, அவர் பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டாரா என்ற கோணத்தில் விசாரித்து வருகிறோம். பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே, இறப்புக்கான முழு விபரம் தெரியவரும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.***