காவேரி மருத்துவமனையில் மகளிர் நலவாழ்வு மையம்
சென்னை, ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனையில், பெண்களுக்கான நலவாழ்வு மையம் திறக்கப்பட்டுள்ளது. ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனையில், காவேரி மகளிர் நலவாழ்வு மையத்தை, நடிகை ஷாலினி அஜித்குமார் திறந்து வைத்தார். இந்த மையம் குறித்து, மருத்துவமனையின் மகளிர் மருத்துவ நிபுணர் ஸபீஹா, குடும்பநல டாக்டர் கவிதா சுந்தரவதனம் கூறியதாவது: பெண்களின் வாழ்க்கையில் ஒவ்வொரு கட்டமும் சவால் நிறைந்ததாக உள்ளது. வளரிளம் பருவத்தில் ஏற்படும் மாதவிடாய் சார்ந்த சிக்கல் முதல் கருவுறுதல், கர்ப்ப காலம், மாதவிடாய் நிறுத்தகால ஆரோக்கியம் வரை பல்வேறு சவால்கள், பெண்களின் வாழ்க்கையில் தொடர்கின்றன. எனவே தான், பெண்களுக்கான பிரத்யேக மையம் துவங்கப்பட்டுள்ளது. இந்த மையத்தில் மகப்பேறு இயல் மற்றும் மகளிர் நோய், மருத்துவம், மார்பக ஆரோக்கியம், சிறுநீரகம் உள்ளிட்ட பல்துறை சார்ந்த நிபுணர்கள் சிகிச்சை அளிக்க உள்ளனர். இவை, நீண்ட கால ஆரோக்கியத்துடனும், தன்னம்பிக்கையுடனும் தரமான வாழ்க்கையை வாழ்வதற்கான சூழலை ஏற்படுத்தி தரும். இவ்வாறு அவர்கள் கூறினர்.