5 பிரிவுகளுக்கு ஒரே சீப் பிளானர் சி.எம்.டி.ஏ.,வில் பணிகள் தாமதம்
சென்னை: சி.எம்.டி.ஏ.,வில் பல்வேறு நிலைகளில், நகரமைப்பு வல்லுனர்கள் உள்ளனர். இதில் உச்சபட்ச நிலையில், சீப் பிளானர்கள் உள்ளனர். முழுமை திட்டம், பரப்பு திட்டப்பிரிவு, பரப்பு வளர்ச்சி பிரிவு, நகர்ப்புற போக்குவரத்து, ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமமான கும்டா ஆகிய பிரிவுகளின் தலைமை பொறுப்பில், சீப் பிளானர்கள் இருப்பர். இதில் கூடுதலாக ஒரு சீப் பிளானர், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறையில், தொழில்நுட்ப பிரிவு கூடுதல் செயலராக உள்ளார். சி.எம்.டி.ஏ., பணி விதிகளின்படி, மூத்த திட்ட அதிகாரிகளுக்கு பணி மூப்பு தகுதி அடிப்படையில், சீப் பிளானர்களாக பதவி உயர்வு வழங்கப்படும். ஆனால், சில ஆண்டுகளாக இதற்கான பணிகள் முறையாக நடக்கவில்லை என்று கூறப்படுகிறது. குறிப்பாக, 2025ம் ஆண்டில், மூன்று சீப் பிளானர்கள் ஓய்வு பெற்ற நிலையில், புதியவர்கள் நியமிக்கப்படவில்லை. இதனால், தற்போது என்.ரவிகுமார் என்ற ஒரு 'சீப் பிளானர்' மட்டுமே பணியில் உள்ளார். இவர் முழுமை திட்ட பிரிவுக்கு தலைமை வகிக்கிறார். இவர், பரப்பு திட்டப்பிரிவு, வரன்முறை பிரிவு, பரப்பு வளர்ச்சி பிரிவு, சாலை ரயில் பிரிவு ஆகிய நான்கு பிரிவுகளுக்கு பொறுப்பு சீப் பிளானராக இருந்து வருகிறார். ஒரே நபர் ஐந்து பிரிவுகளுக்கு சீப் பிளானராக இருப்பதால், முழுமை திட்டம் உட்பட பல்வேறு பணிகளுக்கான முடிவுகள் எடுப்பதில் தாமதம் ஏற்படுவதாக கூறப்படுகிறது. தொழில்நுட்ப ரீதியான கோப்புகளில், தினசரி முடிவு எடுப்பதில் ஏற்படும் தாமதத்தை கருத்தில் வைத்து, சீப் பிளானர்கள் நியமிக்க உயரதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும். தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன், இந்த விஷயத்தில் உயரதிகாரிகள் நல்ல முடிவு எடுப்பர் என, பல்வேறு தரப்பினரும் எதிர்பார்க்கின்றனர்.