உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / விபத்து பகுதிகள் குறித்து மாநகராட்சிக்கு... கடிதம் எழுதுங்க! போலீசாருக்கு கூடுதல் கமிஷனர் கட்டளை

விபத்து பகுதிகள் குறித்து மாநகராட்சிக்கு... கடிதம் எழுதுங்க! போலீசாருக்கு கூடுதல் கமிஷனர் கட்டளை

சென்னையில் விபத்து நடந்த இடங்களில், மீண்டும் விபத்து நடக்காத வகையில், தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்படி, போக்குவரத்து போலீசாருக்கு, உத்தரவிடப்பட்டு உள்ளது. மீண்டும் அதே இடத்தில் விபத்து நடந்தால், போலீசார் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டு உள்ளது.சென்னையில் பெரும்பாலான சாலைகள் சீரமைக்கப்பட்டாலும், சேவைத் துறைகள் அவ்வப்போது தோண்டி, அவற்றை சேதப்படுத்துகின்றன.அவை உடனுக்குடன் சீரமைக்கப்படுவது இல்லை. பணிகள் முடிய பல மாதங்கள் ஆவதால், போக்குவரத்து பெரும் சிக்கலாகிவிடுகிறது.தவிர, சாலை விதிகளை மீறும் வாகன ஓட்டிகள், போக்குவரத்து சிக்னல்கள் சரி வர செயல்படாதது உள்ளிட்ட காரணங்களால், ஆங்காங்கே விபத்துகளும், உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன.இந்தாண்டில் நான்கு மாதங்களில், 1,186 இடங்களில் விபத்துகள் நடந்துள்ளன. இந்த இடங்களில் மீண்டும் விபத்துகள் நடக்காத வகையில், உரிய நடவடிக்கைகளை எடுக்க, போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.இதுகுறித்து, போக்குவரத்து கூடுதல் கமிஷனர் கார்த்திகேயன் பிறப்பித்துள்ள உத்தரவு: ஒவ்வொரு போக்குவரத்து ஆய்வாளரும், தங்கள் பகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் விபத்து ஏற்படும் வகையில், சாலைகளில் ஏதேனும் பள்ளம் உள்ளதா; அவ்வாறு தென்பட்டால் உடனே மாநகராட்சிக்கோ அல்லது நெடுஞ்சாலை துறைக்கோ சீரமைக்க கோரி கடிதம் அனுப்புங்கள்  சாலை விபத்தில் உயிரிழப்பு ஏற்படும் பட்சத்தில், சம்பந்தப்பட்ட விபத்து எதனால் ஏற்பட்டது; இனியும் தொடராத வகையில் எந்த மாதிரி நடவடிக்கைகளை எடுக்கலாம் என, அப்பகுதி போக்குவரத்து எஸ்.ஐ., கள ஆய்வு செய்ய வேண்டும் அதிவேகமாக வாகனம் ஓட்டியதால் விபத்து ஏற்பட்டுள்ளது என்றால், அவ்விடத்தில் வேகத்தடை அமைக்கவும், எச்சரிக்கை பதாகையும் அமைக்க வேண்டும் தொடர் விபத்து ஏற்படும் பகுதி என்றால், மெதுவாக செல்லவும் என விழிப்புணர்வு பதாகை அமைக்க வேண்டும் ஏற்கனவே சாலை விபத்தில் உயிரிழப்பு ஏற்பட்ட பகுதிகளில், விபத்துகள் நிகழாமல் தடுக்க, ஆய்வாளர்கள் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.அதே இடத்தில் விபத்தா: போலீசாரே பொறுப்புவிபத்து நடந்த இடங்களில், அதற்கான காரணத்தை கண்டறிந்து, மீண்டும் விபத்து நடக்காத வகையில், தடுப்பு நடவடிக்கைகளை, போக்குவரத்து போலீசார் முன்னெடுக்க வேண்டும். மீண்டும் அதே இடத்தில் விபத்து நடந்தால், சம்பந்தப்பட்ட பகுதி போக்குவரத்து போலீசாரே அதற்கு பொறுப்பேற்க வேண்டும் என, போலீஸ் உயர் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.இதுகுறித்து, போக்குவரத்து போலீசார் கூறியதாவது: வாகன போக்குவரத்திற்கு மட்டுமே அதிக கவனம் செலுத்தி ஆங்காங்கே, 'யு-டர்ன்' வழங்கப்பட்டுள்ளது. ஆனால், பாதசாரிகள் ஒரு புறத்திலிருந்து மற்றொரு புறத்திற்கு கடக்க, எந்த வழிவகையும் செய்யவில்லை. விபத்து நடக்கக்கூடாது என்றால், வாகன ஓட்டிகள் சாலை விதிகளை முறையாக பின்பற்ற வேண்டும். தனிமனித ஒழுக்கம் தேவை. ஓட்டுநர்களின் அஜாக்கிரதைக்கு நாங்கள் எந்த வகையில் பொறுப்பேற்க முடியும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.- நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Kalyanaraman
மே 30, 2025 09:07

சாலை விதிகளை மீறுபவர்களை யார் வேண்டுமானாலும் போட்டோ எடுத்து சம்பந்தப்பட்ட வலைதளத்தில் தெரிவித்தால் விதி மீறியவருக்கு அபராதம் விதிக்கப்படும் என்பது தற்போது உள்ளது. அது போலவே பழுதடைந்த சாலைகளை பொதுமக்கள் போட்டோ எடுத்து இது போலவே தெரிவித்தால் தெரிவித்தவற்கு சிறிய சன்மானமும் உடனடியாக அந்த சாலையும் சீர் செய்யப்பட வேண்டும். இவ்வாறு செய்தால் அனைத்து சாலைகளும் ஒரு சில வாரங்களிலேயே சரியாகிவிடும். பொது மக்களுக்கு கொடுக்கும் சன்மானத்தை சம்பந்தப்பட்ட ஊழியர்களிடமிருந்து பிடித்தம் செய்ய வேண்டும். நம் நாட்டில் சட்டங்களுக்கும் நீதிமன்றங்களுக்கும் முதுகெலும்பும் ஆண்மையும் இருந்தால் இது நிச்சயம் நிறைவேறும். பொது மக்களுக்கு ஒரு சட்டம் - அரசுக்கு ஒரு சட்டமா?


Kalyanaraman
மே 30, 2025 08:59

சாலை விதிகளை பின்பற்றவில்லை எனில் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் இருப்பது போல் சாலை சரியாக இல்லாததற்கு / பராமரிக்காததற்கு மாநகராட்சிக்கு அபராதம் விதிக்க வேண்டும். நம்ம நாட்டில் அரசு என்ன வேணுமானாலும் செய்யலாம். அது குற்றமே இல்லை. இதுதான் நமது ஆண்மையற்ற, முதுகெலும்பற்ற சட்டங்களும் நீதிமன்றங்களும் நமக்கு உணர்த்துவது.


சமீபத்திய செய்தி