ரூ.20,000 லஞ்ச எஸ்.ஐ., மாற்றம் நகை திருடிய யோகா மாஸ்டரும் கைது
கே.கே.நகர், வடபழனி, ஏ.வி.எம்., அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்த சங்கர், 40; வளசரவாக்கத்தில் ஐ.டி., நிறுவனம் நடத்தி வருகிறார். கடந்த மாதம் 3ம் தேதி, இவரது வீட்டில் இருந்து, 40 சவரன் நகைகள் மாயமானது குறித்து, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.வழக்கு கே.கே.நகர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டு, எஸ்.ஐ., ராஜேந்திரன் விசாரித்தார். அப்போது அவர் சங்கரிடம், அவரது நண்பர் மொபைல் எண்ணிற்கு 20,000 லஞ்சமாக அனுப்ப கூறியதாகவும், அதன்படி சங்கர் அனுப்பியதாகவும் கூறப்படுகிறது.பணம் பெற்றும் விசாரணை நடத்தாமல் இருந்ததாகவும், இதுகுறித்து கேட்ட சங்கரிடம், எஸ்.ஐ., அநாகரீகமாக பேசியதாகவும் கூறப்படுகிறது.இதுகுறித்து சங்கர், தி.நகர் துணை கமிஷனரிடம் புகார் அளித்து, உயரதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், எஸ்.ஐ., ராஜேந்திரனை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி, போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவிட்டுள்ளார்.இந்த வழக்கில் திடீர் திருப்பமாக, சங்கர் வீட்டிற்கு யோகா கற்றுக் கொடுக்க வந்த யோகா மாஸ்டரான வடபழனி, ஏ.வி.எம்., ஸ்டூடியோ பகுதியைச் சேர்ந்த காயத்ரி, 58, என்பவரை, கே.கே., நகர் போலீசார் நேற்று கைது செய்தனர்.விசாரணையில், கடந்த மாதம் சங்கர் வீட்டிற்கு காயத்ரி வந்தபோது, நகை இருந்த அறை திறந்து கிடந்துள்ளது. அதிலிருந்து, 40 சவரன் நகைகளை எடுத்த அவர், ஒரு பகுதியை விருகம்பாக்கத்தில் உள்ள பிரபலமான நகைக்கடை ஒன்றில் விற்று, 3 லட்சத்து 81 ஆயிரம் ரூபாயில் வைர செயின் வாங்கியது தெரிந்தது.