உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  ரயில் முன் பாய்ந்து வாலிபர் தற்கொலை கடன் தொல்லையால் விபரீதம்

 ரயில் முன் பாய்ந்து வாலிபர் தற்கொலை கடன் தொல்லையால் விபரீதம்

எண்ணுார்: கடன் தொல்லை காரணமாக, நண்பரிடம் கடைசியாக மொபைல் போனில் பேசியபடி, ரயில் முன் பாய்ந்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார். எண்ணுார், அன்னை சிவகாமி நகர், ஆறாவது தெருவைச் சேர்ந்தவர் 'போட்டோ' மணி. புகைப்பட கலைஞர். ஓராண்டிற்கு முன், உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். இவர் மகன் கோகுல் பிரசாத், 32, தனியார் தொழிற்சாலையில், ஒப்பந்த ஊழியராக வேலை பார்த்தார். தந்தை உடல்நலக்குறைவால் சிகிச்சையில் இருந்தபோது, மருத்துவ செலவிற்காக கடன் வாங்கியிருந்தார். அவர் இறப்பிற்கு பின், தாய்க்கும் உடல்நிலை பாதிப்பு ஏற்படவே, அதற்காகவும் கடன் வாங்கியிருந்ததாக கூறப்படுகிறது. கடன் அதிகமாகவே, கொடுத்தவர்கள் திருப்பி கேட்டு பிரச்னை செய்துள்ளனர். இதனால் மன உளைச்சலில் இருந்த கோகுல் பிரசாத், நேற்று முன்தினம் இரவு, தன் நண்பர் அஜித் என்பவரிடம், மொபைல் போனில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது, 'கடன் தொல்லை அதிகமானதால், ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொள்ளப்போகிறேன்' என கூறியுள்ளார். நண்பர் ஆறுதல் சொல்லியும் கேட்காமல், மொபைல் போனில் பேசியபடியே எர்ணாவூர் - மசூதி பின்புறம் உள்ள ரயில்வே கேட் அருகே, ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்த கொருக்குப்பேட்டை ரயில்வே போலீசார், இறந்த வாலிபரின் உடலை, பிரேத பரிசோதனைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்