சீயோன், ஆல்வின் குழும பள்ளிகள் ஆசிரியர் தின விழா கொண்டாட்டம்
சேலையூர், சீயோன் மற்றும் ஆல்வின் குழும பள்ளிகள் சார்பில், ஆசிரியர் தின கொண்டாட்டம், சேலையூரை அடுத்த மப்பேடு, சீயோன் சர்வதேச பொதுப் பள்ளியில், நேற்று மாலை நடந்தது. சீயோன் மற்றும் ஆல்வின் குழும பள்ளிகளின் தலைவர் விஜயன் வரவேற்றார். விழாவில், ஆசிரியர்களுக்கு சான்றிதழ் வழங்கி, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் பேசியதாவது: தமிழக அரசு சார்பில், நேற்று முன்தினம் நடத்தப்பட்ட ஆசிரியர் தின விழாவில், 396 சிறந்த ஆசிரியர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. அதில், சைதாப்பேட்டையை சேர்ந்த இரண்டு ஆசிரியர்கள் சான்றிதழ் பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆசிரியர்கள் என்பவர், என்றென்றும், எக்காலத்திலும் மறக்க முடியாதவர்கள். ஆசிரியர்களிடம் இருக்கும் நற்பண்புகள், வேறு எந்த துறையில் இருப்பவர்களிடம் இல்லை. இவ்வாறு, அவர் பேசினார். முன்னதாக, ஆசிரியைகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. விழாவில், சீயோன் மற்றும் ஆல்வின் குழும பள்ளிகளின் துணை தலைவர் ஆல்டஸ், இயக்குனர் ரேச்சல், தாம்பரம் எம்.எல்.ஏ., ராஜா, தமிழக காவல் துறை சைபர் கிரைம் கண்காணிப்பாளர் ஷனாஸ் இலியாஸ் மற்றும் 1,500 ஆசிரியர்கள் பங்கேற்றனர். ***