தங்கக்கட்டி மோசடி 4 பேர் கைது
சூலுார்:தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அமிர்தம் நகரைச் சேர்ந்த ராஜசேகரன் மகன் ஹரிசங்கர், 45; நகை கடை உரிமையாளர். இவரது நண்பர் மூலம் சந்திரசேகர் என்பவர் அறிமுகமானார். அவர், 20க்கும் மேற்பட்ட பைனான்ஸ் நிறுவனங்கள் நடத்தி வருவதாக கூறினார். பின், ஒரு நாள், 1 கிலோ தங்கக்கட்டிகள் தேவைப்படுவதாக ஹரிசங்கரிடம் கூறினார்.அவருக்கு உதவி செய்ய நினைத்த ஹரிசங்கர், கடந்த 10ம் தேதி, தங்கக் கட்டிகளுடன் கோவை பாப்பம்பட்டிக்கு வந்தார். அவரை தொடர்பு கொண்ட போது, 'மேலாளர் ராஜ்குமாரை அனுப்புகிறேன்; அவருடன் காரில் கம்பெனிக்கு வாருங்கள்' என சந்திரசேகர் கூறினார். அதை உண்மை என நம்பி, தங்கக் கட்டிகளுடன் காரில் ஏறிய ஹரிசங்கரிடம், தங்கக் கட்டிகளை நைசாக வாங்கிய ராஜ்குமார் என்ற நபர், காரில் இருந்து இறங்கி சென்று விட்டார். 1 கிலோ தங்கக் கட்டிகளை இழந்த ஹரிசங்கர், போலீசில் புகார் அளித்தார். சூலுார் போலீசார், குற்றவாளிகளை தேடும் பணியில் ஈடுபட்டனர். போலீசாரின் தீவிர தேடுதல் வேட்டையில், சிறுவன் உட்பட நான்கு பேர் சிக்கினர். இதையடுத்து, அவர்களை கைது செய்து, 1 கிலோ தங்கக் கட்டிகள், கார் ஆகியவற்றை பறிமுதல் செய்து, போலீசார் விசாரிக்கின்றனர்.