நடிகர் விஜய்யின் கோட் திரைப்படம்; கோவையில் ரசித்தார் சிவகார்த்திகேயன்
கோவை: நேற்று வெளியான நடிகர் விஜய்யின் 'கோட்' திரைப்படத்தை, நடிகர் சிவகார்த்திகேயன், கோவை 'பிராட்வே சினிமாஸ்'ல் கண்டுகளித்தார்.'தமிழக வெற்றிக் கழகம்' கட்சியை துவங்கியுள்ள நடிகர் விஜய், 2026 சட்டசபை தேர்தலை இலக்காக கொண்டு, முழு வீச்சில் கட்சிப் பணிகளில் செயல்பட ஆரம்பித்துள்ளார். இதையடுத்து, தற்போது அவர் நடித்த 'கோட்' திரைப்படம், நேற்று வெளியானது.நேற்று, 'கோவை பிராட்வே' சினிமாஸில், வெளியான திரைப்படத்தை, அதில் நடித்துள்ள நடிகர் சிவகார்த்திகேயன் வந்து கண்டுகளித்தார். நேற்று மட்டும், தமிழகம் முழுவதும், காலை 9:00 மணிக்கு 'கோட்' திரைப்படம், சிறப்பு காட்சியாக வெளியிடலாம் என தமிழக அரசு உத்தரவிட்ட நிலையில், தமிழகத்தில், கோவை 'பிராட்வே'யில் மட்டும், காலை 7:00 மணிக்கு திரைப்படம் வெளியிடப்பட்டது.இதுகுறித்து, 'பிராட்வே' சினிமாஸ் நிர்வாக இயக்குனர் சதீஷ்குமாரிடம் கேட்டபோது, ''பிராட்வே சினிமாஸில் உள்ள, எபிக், கோல்டு, ஐ மேக்ஸ், இவை மூன்றுமே, சிறப்பு தொழில்நுட்பம் வாய்ந்த சிறப்பு திரையரங்கங்கள். இதற்கு முதலீடு அதிகம். குறிப்பிட்ட இந்த திரைப்படத்துக்கு மட்டுமல்லாமல், எல்லா திரைப்படங்களுக்கும், காலை 7:00 மணி முதல் சிறப்பு காட்சிகள் வெளியிடும் வகையில், 'பிராட்வே'க்கு மட்டும், சிறப்பு அனுமதியை, அரசிடம் நாங்கள் ஏற்கனவே வாங்கியிருக்கிறோம். எங்களுக்கு, 6 ஷோ வரை திரையிட அனுமதி இருக்கிறது. நேரத்தை பொறுத்து திரையிடப்படும்,'' என்றார்.திரைப்படம் பார்த்து வெளியே வந்த ரசிகர்கள், படம் மிகவும் அருமையாக இருப்பதாகவும், இரண்டாம் பாகத்துக்கான அச்சாரம் போடப்பட்டதாகவும் பெருமிதம் தெரிவித்தனர்.