அரங்கநாதர் கோவில் தேர்த் திருவிழா நாளை துவக்கம்
மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் கோவில் மாசி மகத் தேர்த்திருவிழா, நாளை கிராம சாந்தியுடன் துவங்குகிறது.காரமடை அரங்கநாதர் கோவில் மாசி தேர்த் திருவிழா நாளை ஐந்தாம் தேதி கிராம சாந்தியுடன் துவங்குகிறது. ஆறாம் தேதி காலை, 11:00 மணிக்கு கொடியேற்றம் நடைபெற உள்ளது. அன்று இரவு அன்னவாகனத்தில் சுவாமி திருவீதி உலா நடைபெற உள்ளது. 11ம் தேதி அதிகாலை, 5:30 மணிக்கு திருக்கல்யாணம் உற்சவமும் நடைபெறுகிறது. அன்று இரவு யானை வாகனத்தில் திருவீதி உலாவும் நடைபெற உள்ளது. 12ம் தேதி அதிகாலை, 5:30 மணிக்கு ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக அரங்கநாத பெருமாள் தேருக்கு எழுந்தருளுகிறார். மாலை, 4:30 மணிக்கு தேரோட்டம் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் அறங்காவலர்கள் செய்து வருகின்றனர்.