உள்ளூர் செய்திகள்

சிட்டி கிரைம்

மனைவியை தாக்கிய பெயின்டர் கைது

கோவை சொக்கம்புதுாரை சேர்ந்தவர் வினோத்குமார், 28; பெயிண்டர். இவரது மனைவி சுகந்தி, 24. இவர்கள் கடந்த, 4 ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். வினோத்குமார் மதுபோதையில் மனைவி மீது சந்தேகப்பட்டு, அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்தார். இதனால் அவர் கோபித்துக் கொண்டு கணவரை பிரிந்து, குழந்தைகளுடன் தனியாக வசித்து வருகிறார். நேற்று முன்தினம் வினோத்குமார் மதுபோதையில், சுகந்தி வீட்டிற்கு சென்று அவரை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கினார். வீட்டில் இருந்த பொருட்களை அடித்து உடைத்தார். சுகந்தி புகாரின் படி, செல்வபுரம் போலீசார் வழக்குப்பதிந்து, வினோத்குமாரை கைது செய்தனர்.--

மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

கோவை, விளாங்குறிச்சி அசோக் நகரை சேர்ந்தவர் பரமசிவன், 61; பிளம்பர் மற்றும் எலக்ட்ரீசியனாக பணிபுரிந்து வந்தார். இவர் கடந்த, 17ம் தேதி சேரன் மாநகர், உதயா நகரில் உள்ள ஒரு வீட்டில் பணிபுரிந்து கொண்டிருந்தார். அப்போது அவர் மீது மின்சாரம் தாக்கி, 20 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்தார். பலத்த காயம் அடைந்த அவரை அங்கிருந்தவர்கள் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின், மேல் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பரமசிவன் மனைவி மாரியம்மாள் புகாரின் படி, பீளமேடு போலீசார் உரிய பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி, அஜாக்கிரதையாக தொழிலாளியை பணிக்கு அமர்த்தியதாக, வீட்டு உரிமையாளர் மாணிக்கம், 48 என்பவர் மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.-

தந்தையை தாக்கிய வாலிபர் கைது

கோவை கவுண்டம்பாளையம் அன்னை இந்திரா நகரை சேர்ந்தவர் ஆறுமுகம், 66; இவரது மகன் சூரிய பிரகாஷ், 29; இவர் நேற்று ஆறுமுகத்திடம் மது குடிக்க பணம் கேட்டார். அவர் கொடுக்க மறுத்தார். ஆத்திரம் அடைந்த சூரிய பிரகாஷ், ஆறுமுகத்தை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கினார். பலத்த காயம் அடைந்த அவரை, அங்கிருந்தவர்கள் மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆறுமுகத்தின் மனைவி கருப்பாத்தாள் புகாரின் படி, கவுண்டம்பாளைம் போலீசார் வழக்கு பதிந்து சூரிய பிரகாசை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.--

பிக்பாக்கெட் வாலிபர் கைது

புதுக்கோட்டையை சேர்ந்தவர் ரமேஷ், 38. வைசியாள் வீதியில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் ரமேஷ் கடைக்கு வேண்டிய பொருட்களை வாங்கி விட்டு, பிரகாசம் பஸ் நிறுத்தத்தில் நின்றிருந்தார். அப்போது அவரது அருகில் நின்றிருந்த வாலிபர் ஒருவர், ரமேஷ் பாக்கெட்டில் இருந்த ரூ.200 ஐ திருடி தப்ப முயன்றார். இதை பார்த்த அவர், அருகில் இருந்தவர்கள் உதவியுடன், அந்த வாலிபரை பிடித்து பெரிய கடை வீதி போலீசில் ஒப்படைத்தார். போலீஸ் விசாரணையில், அந்த வாலிபர் மேற்கு வங்கத்தை சேர்ந்த தபன் மொண்டல், 26, என்பது தெரிந்தது. போலீசார் அவரை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ