உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / குளங்களில் கழிவு நீர் கலப்பதை தடுக்க கமிஷனர் சபதம்! தன்னார்வ அமைப்புகளுடன் தீவிர ஆலோசனை

குளங்களில் கழிவு நீர் கலப்பதை தடுக்க கமிஷனர் சபதம்! தன்னார்வ அமைப்புகளுடன் தீவிர ஆலோசனை

கோவை;கோவை மாநகராட்சி பராமரிப்பில் ஒன்பது குளங்கள் உள்ளன. உக்கடம் பெரிய குளம், வாலாங்குளம் மற்றும் முத்தண்ணன் குளங்களுக்கு அருகே சுத்திகரிப்பு நிலையங்கள் கட்டியிருந்தாலும் சில வழித்தடங்கள் வழியாக கழிவு நீர் கலக்கிறது.இதற்கு நிரந்தர தீர்வுகளை கண்டறிந்து செயல்விளக்கம் அளிக்க, தமிழக அரசின் தலைமை செயலர் முருகானந்தம், மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரனிடம் கோரியுள்ளார்.இதைத்தொடர்ந்து, தனியார் ஆலோசனை நிறுவனம் மூலமாக ஒவ்வொரு குளமும் ஆய்வு செய்யப்பட்டுள்ளது; கமிஷனரும் நேரில் பார்வையிட்டு, பிரச்னைகளை கண்டறிந்திருக்கிறார்.இச்சூழலில், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், தன்னார்வ அமைப்பினரிடம் கருத்து கேட்பு கூட்டம், கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கத்தில் நடந்தது.மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் கூறுகையில், ''ஒவ்வொரு குளத்துக்கும் எந்தெந்த வழித்தடங்களில் நீர் வரத்துகாணப்படுகிறது; கழிவு நீர் எந்தெந்த வழிகளில் கலக்கிறது என மாநகராட்சி மற்றும் தன்னார்வ அமைப்பினர் இணைந்து கண்டறிய உள்ளோம். தண்ணீரின் தரம் ஆய்வு செய்ய 'சாம்பிள்' எடுக்கப்பட்டுள்ளது; இன்னும் 'ரிசல்ட்' வரவில்லை.குளங்களில் கழிவு கலக்காத வகையில், விடுபட்ட வீடுகளுக்கு பாதாள சாக்கடை இணைப்பு வழங்குவது; வாய்க்கால்களை சுத்தம் செய்வது; ஆகாயத்தாமரை அகற்றுவது உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொண்டு, குளங்களில் சுத்தமான தண்ணீர் தேக்க பேசியிருக்கிறோம்,'' என்றார்.

'நல்லது நடக்கும்'

'சிறுதுளி' அமைப்பு நிர்வாக அறங்காவலர் வனிதா மோகன் கூறுகையில், ''குளங்களுக்கான நீர் வரத்து, தண்ணீரின் தரத்தை ஆராய்ந்து, எந்த டெக்னாலஜியை பயன்படுத்தி, நீர் நிலைகளை மேம்படுத்தலாம் என்கிற திட்ட அறிக்கை தயாரித்திருக்கிறோம். உதாரணத்துக்கு, வெள்ளக்கிணறு குட்டையை மேம்படுத்த உத்தேசித்துள்ளோம்.கோவை மாநகராட்சி வசமுள்ள அனைத்து நீர் நிலைகளிலும், கழிவு நீர் கலக்காத அளவுக்கு திட்ட அறிக்கை தயாரித்து சமர்ப்பிக்க, தமிழக அரசின் தலைமை செயலர் முருகானந்தம் அறிவுறுத்தியுள்ளார்.அதன் பேரில், சுற்றுச்சூழல் அமைப்புகள் மற்றும் தன்னார்வலர்கள் ஆலோசனை வழங்கினர். மிகவும் சிறப்பாக கூட்டம் நடந்தது. மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன், பல்வேறு ஆலோசனை வழங்கி, சக அலுவலர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கினார். நல்லது நடக்குமென்கிற நம்பிக்கை பிறந்திருக்கிறது,'' என்றார்.கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு ஒருங்கிணைப்பாளர் மணிகண்டன் கூறுகையில், '' வடவள்ளி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீர் நரசாம்பதி குளத்தில் கலக்கிறது. செல்வம்பதி குளத்தில் கிருஷ்ணாம்பதி குளத்துக்கு வரும் உபரி நீர் போக்கி உடைந்திருக்கிறது; அதை சீரமைக்க வேண்டும். நொய்யல் ஆற்றில் புட்டுவிக்கி பகுதியில் பம்ப்பிங் ஸ்டேஷன் கழிவு நீர் கலக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை