ரயில்வே மேம்பாலத்தில் ஒளிராத விளக்குகள்
பொள்ளாச்சி:பொள்ளாச்சி, கோட்டூர் பஸ் ஸ்டாப் ஒட்டிய ரயில்வே மேம்பாலத்தில், இரவு நேரத்தில் முழுமையாக எரியாத மின் விளக்குகளால், இருள் சூழ்ந்து, விபத்து ஏற்படுகிறது.பொள்ளாச்சி, கோட்டூர் பஸ் ஸ்டாப் அருகே ரயில்வே மேம்பாலம் சுற்றுப்பகுதி கிராமங்களை இணைக்கும் முக்கிய வழித்தடமாக உள்ளது.குறிப்பாக, கிராம மக்கள் மட்டுமின்றி, வால்பாறை, ஆழியாறு உள்ளிட்ட சுற்றுலாத்தலங்களுக்கு சென்றும் திரும்பும் சுற்றுலாப் பயணியரும், இந்த மேம்பாலத்தையே பயன்படுத்துகின்றனர். இதனால், இவ்வழித்தடத்தில் எப்போதும் வாகன போக்குவரத்து அதிகளவில் காணப்படும்.வாகன ஓட்டுநர்கள் கூறியதாவது:ரயில்வே மேம்பாலத்தில், இருபுறமும் மின்விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், பல இரவுகளில், மின்விளக்குகள் எரிவதில்லை. சில நேரங்களில், முழுமையாக அல்லாமல், சில விளக்குகள் மட்டுமே எரிகின்றன.துறை ரீதியான அதிகாரிகள், பழுதான விளக்குகளை சரி செய்வதுடன், இரவு நேரங்களில் விளக்குகள் எரிவதை உறுதி செய்ய வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.