பள்ளி மாணவியை சீண்டிய டாக்டர்கள் சிறையில் அடைப்பு
தொண்டாமுத்தூர்:கோவை, ஆலாந்துறை சுற்றுப்பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில், பள்ளி நிர்வாகம் சார்பில், மாணவியருக்கு, நல்ல தொடுதல், கெட்ட தொடுதல் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சி நிறைவடைந்த பின், சில மாணவியர், தங்களிடம் ஒரு டாக்டர் தவறான தொடுதல் செய்ததாக, பள்ளி தலைமையாசிரியரிடம் புகார் தெரிவித்துள்ளனர்.மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு கமிட்டியினர் பள்ளிக்கு நேரில் வந்து, மாணவியரிடம் விசாரணை நடத்தினர்.அப்போது, 'தனியார் அறக்கட்டளையின் கீழ் செயல்படும் நடமாடும் மருத்துவ வாகனம், எங்கள் பகுதிக்கு வந்தது. அதில், பரிசோதனை செய்த போது, அதில் இருந்த டாக்டர், பாலியல் சீண்டலில் ஈடுபட்டார்' என, 10க்கும் மேற்பட்ட மாணவியர் தெரிவித்தனர்.பேரூர் அனைத்து மகளிர் போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். சீண்டலில் ஈடுபட்ட தனியார் அறக்கட்டளையின் நடமாடும் மருத்துவ வாகன டாக்டர் சரவணமூர்த்தி, 31, என்பவரை, போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.வேலுார் மாவட்டம், காட்பாடியை சேர்ந்த, 19 வயது மாணவி, நர்சிங் கல்லுாரியில் இரண்டாமாண்டு படிக்கிறார். இரண்டு மாத பயிற்சிக்காக, குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சேர்ந்தார். அங்கு மாணவிக்கு, எலும்பு சிகிச்சை டாக்டர் பாபு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். குடியாத்தம் டவுன் போலீசில், மாணவி புகார் செய்தார். வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், தலைமறைவான பாபுவை, போலீசார் நேற்று கைது செய்தனர்.திருச்சி, மேலப்புதுாரில் டி.இ.எல்.சி., சபைக்கு சொந்தமான துவக்கப் பள்ளியின் தலைமை ஆசிரியராக கிரேஸ் சகாயராணி இருந்தார்.இவரது மகன் சாம்சன், 31; லால்குடி அரசு மருத்துவமனை டாக்டர். திருமணமாகாத சாம்சன், தாய் பணிபுரியும் பள்ளியில் உள்ள விடுதியில் சிறுமியருக்கு, மருத்துவம் பார்ப்பது போல், அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.மாவட்ட குழந்தைகள் நல ஆணையத்துக்கு தகவல் தெரிந்து, கோட்டை அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர். விசாரணையில், சாம்சன் சிறுமியருக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உண்மை என தெரியவர, மூன்று நாட்களுக்கு முன் சாம்சன், அவரது தாய் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். இருவரும் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், சாம்சன் நேற்று சஸ்பெண்ட் செய்யப்பட்டார். கிரேஸ் சகாயராணியை சஸ்பெண்ட் செய்யும் நடவடிக்கையை பள்ளி நிர்வாகம் மேற்கொண்டுள்ளது.