பெயர் பலகைகளில் உள்ள எழுத்துக்கள் அழிப்பு கடுமையான நடவடிக்கை எடுக்க எதிர்பார்ப்பு
கோவை: பலகைகளில் உள்ள எழுத்துக்களை அழிப்பவர்கள் மீது, சட்டப்படி நடவடிக்கை எடுக்க ரயில்வே சட்ட விதிகள் வழிவகை செய்கின்றன. இதன் அடிப்படையில், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பயணிகள் வலியுறுத்துகின்றனர்.கடந்த சில தினங்களாக, மும்மொழிக் கொள்கைக்கு எதிராக, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும், தி.மு.க., சார்பில் போராட்டங்கள் நடத்தப்படுகின்றன. ரயில்வே ஸ்டேஷன்களில் உள்ள பெயர் பலகைகளில், இந்தி எழுத்துக்கள் தார், பெயின்ட் பூசி அழிக்கப்படுகின்றன. இதனால், ரயில்வே நிர்வாகத்துக்கு பொருள் செலவும், காலவிரயமும் ஏற்படுகிறது. தமிழ், ஆங்கிலம் வாசிக்கத் தெரியாத வெளிமாநிலத்தவர், பெயர் பலகைகளில் என்ன எழுதியுள்ளது என தெரியாமல் தடுமாறும் நிலை ஏற்படுகிறது. இவ்வாறு பெயர் பலகைகளில் உள்ள எழுத்துக்களை, அழிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க ரயில்வே சட்டங்கள் வழிவகை செய்கின்றன.ரயில்வே போலீசார் கூறுகையில், 'ரயில்வே சட்ட விதி, 166ன் படி, ரயில்வேக்கு சொந்தமான பெயர் பலகைகளில் உள்ள எழுத்துக்களை அழித்தால், மூன்று மாதம் சிறை தண்டனை, ரூ.500 அபராதம் விதிக்கப்படும். இச்செயலில் ஈடுபடும் ஒவ்வொரு நபருக்கும், இத்தண்டனை வழங்க முடியும். அதேபோல் ரயில்வே சட்டம், 147ன் படி, தொல்லை அளித்த வழக்கு பதிய முடியும். அதேபோல், அத்துமீறி நுழைதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழும் வழக்கு பதியலாம். இதற்கு அபராதம் விதிக்க முடியும்' என்றனர்.