பாசன நீர் வழங்காததால் விவசாயிகள் போராட்டம்: மறியலால் போக்குவரத்து பாதிப்பு
பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே, மூலத்தரா வலதுகரை விவசாயிகள், நீர் முறையாக வழங்காததை கண்டித்து, மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.பி.ஏ.பி., திட்டத்தில் ஆழியாறு அணையில் இருந்து, கேரளாவுக்கு ஆண்டுக்கு 7.25 டி.எம்.சி., தண்ணீர் வழங்கப்படுகிறது.ஆழியாறு அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் தமிழகத்தில், மணக்கடவு பகுதியில் அளவீடு செய்யப்பட்டு கேரளாவுக்கு வழங்கப்படுகிறது.கேரளா நீர்ப்பாசனத்துறை நிர்வாகம் தமிழகத்தில் இருந்து கிடைக்கும் தண்ணீரை, தமிழக - கேரளா எல்லையில் உள்ள மூலத்தரா அணையில் தேக்கி வைத்து, வலது மற்றும் இடது கரை கால்வாய் வாயிலாக பாசனத்துக்கு வழங்குகிறது.அந்த தண்ணீரை மூலத்தரா அணையில் சேமித்து, வலது, இடது கால்வாயில் பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்கு திறக்கப்படுகிறது.இதில், வலது கால்வாய் பகுதியில் தமிழர்கள் அதிகம் வசிக்கின்றனர். கொழிஞ்சாம்பாறை, எருத்தேன்பதி, வடகரை ஆகிய ஊராட்சிகளுக்கு உட்பட்ட பகுதிகள்,வலது கால்வாயால் அதிகம் பயன்பெறுகிறது. இந்த கால்வாய் வாயிலாக, 23 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசனம் பெறுகின்றன. இதை பயன்படுத்தி, நெல், வாழை, காய்கறிகள், ஜாதிக்காய், கோகோ போன்றவை சாகுபடி செய்யப்படுகின்றன. வலது கால்வாய் பகுதிக்கு தண்ணீர் திறக்காததை கண்டித்து, வலது கரை நீர்பாசன பகுதி விவசாயிகள், பொள்ளாச்சி - பாலக்காடு ரோடு, வண்ணாமடை அருகே மறியலில் ஈடுபட்டனர். போலீசார் பேச்சு நடத்தியதையடுத்து, போராட்டம் கைவிட்டு விவசாயிகள் கலைந்து சென்றனர்.இதனால், போக்குவரத்து பாதித்தது.விவசாயிகள் கூறியதாவது:ஆழியாறு அணையில் இருந்து கேரளாவுக்கு கிடைக்கும் நீரை, மூலத்தரையில் இருந்து பாசனத்துக்காக பகிர்ந்து வழங்குவதில் அதிகாரிகள் அலட்சியம் காட்டுகின்றனர்.கடந்தாண்டு வறட்சியை காரணம் காட்டி வலது கரை பாசனத்துக்கு தண்ணீர் வழங்கவில்லை.தற்போது மழை பெய்து தண்ணீர் இருப்பு இருந்தும் தண்ணீர் தர மறுக்கின்றனர். பாசனத்துக்கு தண்ணீர் திறக்கும் போது வலதுகரை விவசாயிகளின் கருத்துக்களை கேட் பதில்லை.இதை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டோம். போலீசார் பேச்சு நடத்தியதில், நீர்வளத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததால் போராட்டம் கைவிடப்பட்டது.இவ்வாறு, கூறினர்.