உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பயிர்களை சேதப்படுத்தும் காட்டுப்பன்றிகள்; இழப்பு ஏற்படுவதால் விவசாயிகள் பாதிப்பு

பயிர்களை சேதப்படுத்தும் காட்டுப்பன்றிகள்; இழப்பு ஏற்படுவதால் விவசாயிகள் பாதிப்பு

கிணத்துக்கடவு : கிணத்துக்கடவு, செங்குட்டைபாளையம் கிராமத்தில் விளை நிலத்தை காட்டுப்பன்றிகள் சேதப்படுத்துவதால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.கிணத்துக்கடவு, வரதனுார் ஊராட்சி செங்குட்டைபாளையம் கிராமத்தில், தென்னை, சோளம், தக்காளி, வெங்காயம் மற்றும் காய்கறி வகை பயிர்களை, விவசாயிகள் பயிரிட்டு வருகின்றனர். கடந்த சில நாட்களாக, இங்கு காட்டுப்பன்றிகள் தொல்லை அதிகரிப்பால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். விளை நிலத்தில் காட்டுப்பன்றிகள் புகுந்து, பயிர்களை நாசம் செய்து வருவதுடன், இரவு நேரத்தில் வாகன ஓட்டுநர்களையும் அச்சுறுத்தி வருகிறது.கடந்த வாரம், இரவு நேரத்தில் பைக்கில் சென்ற நபர், காட்டுப்பன்றி குறுக்கிட்டதால் தடுமாறி விழுந்து விபத்துக்கு உள்ளானார்.இதனால், இரவு நேரத்தில் பைக்கில் செல்ல அப்பகுதி மக்கள் அச்சப்படுகின்றனர். எனவே, காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என, அப்பகுதியினர் வலியுறுத்துகின்றனர்.

இரவில் அட்டகாசம்

விவசாயி -அய்யாசாமி கூறுகையில், ''காட்டில் தக்காளி மற்றும் தென்னை பயிரிட்டுள்ளோம். இரவு நேரத்தில் காட்டுப்பன்றிகள் நுழைந்து தக்காளி செடிகளை சேதப்படுத்தி, மண்ணை பறித்து அட்டகாசம் செய்கிறது. இதனால் விளை பொருட்கள் சேதமடைந்து இழப்பு ஏற்படுகிறது. காட்டுப்பன்றிகளை விரட்டினாலும், மீண்டும் வந்து பயிரை நாசம் செய்கின்றன. அவற்றை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றனர்.

கட்டுப்படுத்தணும்!

விவசாயி -வரதராஜ் கூறுகையில், 'தென்னை, சோளம் மற்றும் பிற பயிர் சாகுபடி செய்து வருகிறேன். தென்னங்கன்று நடவு செய்து சில நாட்களே ஆகிறது. காட்டுப்பன்றிகள் தென்னங்கன்றுகளை சேதப்படுத்துகின்றன. மேலும், இரவில் வாகனத்தில் செல்லும் போது காட்டுப்பன்றிகள் குறுக்கே பாய்வதால், மக்கள் அச்சப்படுகின்றனர். விவசாயிகள் நலன் கருதி காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்த வேண்டும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை