காய்ந்த புல்லில் தீ; விவசாயிகள் கவலை
மேட்டுப்பாளையம்; மேய்ச்சல் நிலங்களில் காய்ந்த நிலையில் இருக்கும் புல், செடிகள் கடுமையான வெப்பத்தால் தீப்பற்றி எரிவதால், கால்நடைகளுக்கு தீவனம் இல்லாத நிலை ஏற்படுகிறது. இதனால், விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். கடந்த இரண்டு வாரமாக வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. அதனால் தரிசு நிலங்களில் உள்ள புல், செடிகள் காய்ந்து சருகு போல் ஆகியுள்ளன. இதில் தீ பிடித்து எரிந்து விடுவதால், மாடுகளுக்கு மேய்ச்சலுக்கு, தீவனம் இல்லாத நிலை ஏற்படுகிறது.கடந்த வாரம் மேட்டுப்பாளையம் தாலுகாவில் பல இடங்களில், தீ பிடித்து எரிந்துள்ளது. நேற்று முன்தினம் அன்னுார் சாலையில் டேங்க் மேடு அருகே, புல்லில் காட்டுத் தீ பிடித்து எரிந்தது. மேட்டுப்பாளையம் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று, தீயை அணைத்துள்ளனர். நேற்று மதியம் அன்னுார் சாலை நால்ரோடு அருகே, தரிசு நிலத்தில் காய்ந்திருந்த புல்லில் தீப்பிடித்து எரிந்தது. இதனால், பறவைகள், அணில்கள், எலி ஆகியவை காட்டுத்தீயால், அங்கும் இங்கும் பாதுகாப்பு தேடி ஓடின. இதுகுறித்து மேட்டுப்பாளையம் தீயணைப்பு அலுவலர் பாலசுந்தரம் கூறுகையில், ''கடந்த ஒரு வாரத்தில் மேட்டுப்பாளையம் நகரில், 5க்கு மேற்பட்ட இடங்களில் காய்ந்த புல்லில் தீப்பிடித்தது குறித்து தகவல் வந்தது. தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று தீயை அணைத்தனர். மார்ச், ஏப்ரல் மாதங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தால், மேலும் பல இடங்களில் தீ விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. அதற்குள் மழை பெய்தால் தீ விபத்து ஏற்படுவது குறையும். எங்காவது தீ விபத்து ஏற்பட்டால், உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு, தகவல் தெரிவிக்க வேண்டும். தீயணைப்பு வீரர்கள் வந்து தீ எரிவதை அணைத்தும், மேலும் தீ பரவாமல் தடுக்கவும், பாதுகாப்பு நடவடிக்கையிலும் ஈடுபடுவர். எனவே பொது மக்கள் விழிப்புடன் இருந்து, தீ விபத்து ஏற்பட்டால், உடனே தீ அணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.'' என்றார்.