வியாபாரிகளை மிரட்டும் மோசடி கும்பல்: ஐ.ஜி., அலுவலகத்தில் புகார்
கோவை:காங்கயம் தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில், 30க்கும் மேற்பட்டோர் கோவை ஐ.ஜி., அலுவலகத்தில் புகார் மனு அளிக்க வந்தனர். அப்போது மோசடியால் பாதிக்கப்பட்ட பிரகாஷ் என்பவர் கூறியதாவது:கடந்த, 6 ஆண்டுகளுக்கு முன் எனக்கு உடுமலையை சேர்ந்த, 2 பேர் அறிமுகமானார்கள். அவர்கள் தேங்காய் மற்றும் கொப்பரை வாங்கி, மொத்த விற்பனை செய்து வருகின்றனர். அவர்கள் பொருட்கள் அனுப்புவதற்கு, முன்பணம் ரூ.21.50 லட்சம் கொடுத்தேன். இதை தொடர்ந்து தேங்காய், கொப்பரை அனுப்ப சொன்னபோது, தொழிலில் நஷ்டம் ஏற்பட்டு விட்டதாக தெரிவித்தனர்.அதன் பின் அவர்கள் குறித்து விசாரித்த போது, பலரிடம் பணம் வாங்கி ஏமாற்றியது தெரிந்தது. அவர்கள் ஏமாற்றிய பலரிடமும், நான் தான் அவர்களுக்கு பணம் கொடுக்க வேண்டி உள்ளது என்று தெரிவித்துள்ளனர். கோவை மாவட்ட குற்றப்பிரிவில், என் மீது பொய் புகார் அளித்துள்ளனர். ஆனால் போலீசார் நான் தகுந்த ஆதாரங்கள் காட்டியும், என் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். பணத்தை அவர்களுக்கு கொடுத்துவிடும்படியும் வற்புறுத்தி வருகின்றனர். இதேபோல் சில மோசடி கும்பல்கள், பல வியாபாரிகளை தொடர்ந்து மிரட்டி வருகின்றனர். இதுகுறித்து டி.ஜி.பி., கோவை ஐ.ஜி., அலுவலகங்களில் புகார் மனு அளித்துள்ளோம். போலீசார் சரியாக விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.