டாக்சி ஸ்டாண்ட்கள் அதிகரிப்பு: பொதுமக்கள் பரிதவிப்பு
பொள்ளாச்சி:பொள்ளாச்சி நகரில், ஆட்டோ, டாக்சிகளுக்கு முறையாக ஸ்டாண்ட் வசதி ஏற்படுத்த நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.தமிழக - கேரள மாநில எல்லையையொட்டி, பொள்ளாச்சி நகர் அமைந்துள்ளது. மேலும், சுற்றுப்பகுதிகளில் அதிகப்படியான சுற்றுலாத்தலங்கள் உள்ளதால், பொள்ளாச்சி மார்க்கமாகவே அதிகப்படியான வாகனங்கள் இயக்கப்படுகின்றன.இதனால், எப்போதும் வாகன நெரிசல் இருந்து கொண்டே உள்ளது. நகராட்சி மற்றும் நெடுஞ்சாலை ஓரங்களின் பல இடங்களில், வாடகை அடிப்படையில் ஓடும் ஆட்டோ, டாக்சி ஸ்டாண்ட்கள் உள்ளன.ஆனால், குறிப்பிட்ட சில பகுதிகளில், ஒரே இடத்தில் ஸ்டாண்ட் ஏற்படுத்தப்படாமல், ஒவ்வொரு வழித்தடத்திலும் ஸ்டாண்ட் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனால், அத்தியாவசிய தேவைக்காக நகருக்கு வருகை புரிவோர் மற்றும் சுற்றுலாப் பயணியர், வாகனங்களை நிறுத்த முடியாமல் பரிதவிக்கின்றனர்.அதேபோல, வாடகைக்கு வாகனங்கள் இயக்கப்படாமல் இருந்தால், ஒரே நேரத்தில், சாலையை ஆக்கிரமித்து வாகனங்கள் நிறுத்தப்படுகிறது. ஒவ்வொரு ஸ்டாண்டிலும் தேவைக்கேற்ப வாகனங்களை நிறுத்தி, பயணியருக்கேற்ப இயக்க வேண்டும்.தன்னார்வலர்கள் கூறுகையில், 'நகரில், சாலையோரத்தில் ஸ்டாண்ட் அமைத்து வாகனங்களை நிறுத்துகின்றனர். வாடகை வாகனங்களை முறைப்படுத்த நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.பொதுமக்களுக்கும், வாகன போக்குவரத்துக்கும் இடையூறாக உள்ள ஸ்டாண்ட்களைக் கண்டறிந்து, மாற்று இடம் வழங்க வேண்டும். ஒரே இடத்தில் அதிகப்படியான வாகனங்கள் நிறுத்தப்படுவதை தடுக்க வேண்டும்,' என்றனர்.