கோவை இஸ்கானில் இன்று முதல் கிருஷ்ண ஜெயந்தி
கோவை;அவிநாசி ரோடு, கொடிசியா வளாகத்திற்கு அருகில் அமைந்துள்ள ஸ்ரீ ஜெகன்நாதர் ஆலயத்தில், இன்று முதல் வரும் 27ம் தேதி வரை, கிருஷ்ண ஜெயந்தி விமர்சையாக கொண்டாடப்படவுள்ளது. இஸ்கான் அமைப்பின், மண்டலச் செயலாளர் தவத்திரு பக்தி விநோத சுவாமி மகராஜ் தலைமையில் விழா நடக்கிறது.குழந்தைகளுக்கு, இன்று, நாளை மற்றும் 26ம் தேதிகளில், கலை நிகழ்ச்சி போட்டிகள் நடக்கின்றன. இன்று மாலை, 'வெற்றி' என்ற தலைப்பில், இளைஞர்களுக்கான விவாதம் மற்றும் கேள்வி பதில் நிகழ்ச்சி நடக்கிறது. வரும் 26ம் தேதி, அதிகாலை 4:15 மணி முதல் நள்ளிரவு வரை, சிறப்பு ஆராதனை, அகண்ட நாம சங்கீர்த்தனம், பகவான் கிருஷ்ணரின் லீலைகள் குறித்த சொற்பொழிவுகள், அபிஷேகம், மகா கலசாபிஷேகம், சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீ ஸ்ரீ ராதாகிருஷ்ணருக்கு வழிபாடுகள், கோபூஜை, தீபாராதனை நடக்கிறது.27ம் தேதி காலை 9:30 மணி முதல், அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தின் ஸ்தாபக ஆச்சரியாரான ஸ்ரீல பிரபுபாதர் தோன்றிய நாள் விழாவும், தொடர்ந்து நந்தோத்சவ பிரசாத விருந்தும் நடைபெறவுள்ளது. மேலும் விபரங்களுக்கு, 77083 58616, 96777 57925 என்ற எண்களில் அழைக்கலாம்.