மேலும் செய்திகள்
விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி தீவிரம்
26-Aug-2024
பொள்ளாச்சி;'விநாயகர் சதுர்த்தியையொட்டி விநாயகர் சிலை தயாரிப்பு பணிகள் நடக்கின்றன. கோதவாடியில் பாரம்பரியமாக மண் எடுக்க அனுமதிக்க வேண்டும்,' என மண்பாண்ட தொழிலாளர்கள் தெரிவித்தனர்.பொள்ளாச்சி பகுதியில், ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி விழா விமரிசையாக கொண்டாடப்படுகிறது.ஹிந்து அமைப்புகள், பொது இடங்களில் சிலைகளை வைத்து வழிபாடு செய்தும்; குடியிருப்புகளில் பலரும் விநாயகர் சிலை வைத்தும் வழிபாடு செய்வதும் வழக்கம்.இந்தாண்டும் விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாட, ஹிந்து அமைப்புகள் தயராகி வருகின்றன. இதற்காக, விநாயகர் சிலை தயாரிப்பு பணிகளும் தீவிரமாக நடந்து வருகின்றன.பொள்ளாச்சி அருகே ஆவல்சின்னாம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், மண்பாண்ட தொழிலாளர்கள், அழகிய விநாயகர் சிலை தயாரிப்பு பணியில் ஈடுபட்டனர். ஒன்றரை அடி முதல், இரண்டரை அடி வரை விநாயகர் சிலைகள் தயாரிக்கப்படுகின்றன.கைகளால் தயாரிக்கப்படும் சிலை, 200 ரூபாய் முதல், 3,000 ரூபாய் வரை விற்கப்படுகின்றன. மண்பாண்ட தொழிலாளர்கள் கூறியதாவது: கோதவாடியில் அனுமதி இல்லாததால், உடுமலை அருகே தளியில் இருந்து ஒரு லோடு மண் எடுத்து வர, 10 ஆயிரம் ரூபாய் செலவாகிறது.அந்த மண், கோதவாடி போன்று இல்லாததால், தரம் பிரித்து பயன்படுத்த வேண்டியதுள்ளது. அந்த மண்ணை சுத்தம் செய்து களி மண் எடுக்க சிரமமாக உள்ளது.தற்போது கிடைத்த மண்ணில் விநாயகர் சிலை தயாரிக்கும் பணிகள் நடக்கின்றன. இதுவரை, 200 சிலைகள் தயாரிக்கப்பட்டுள்ளன. இந்தாண்டு விற்பனை விறு, விறுப்பாக இருக்கும் என நினைக்கிறோம்,' என்றனர். நடவடிக்கை தேவை
இந்தாண்டு விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, சிலைகள் தயாரிப்புக்காக கோதவாடியில் மண் எடுக்க அனுமதிக்க வேண்டுமென மண்பாண்ட தொழிலாளர்கள், அதிகாரிகளை சந்தித்து மனு கொடுத்து வந்தனர்.ஆனால், உரிய அனுமதி கிடைக்காததால், மண் இல்லாமல் சிலைகள் தயாரிக்க முடியாத நிலையில் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டனர்.மற்ற பகுதி மண்ணை விட கோதவாடி மண், சிலைகள், மண்பாண்டங்கள் தயாரிப்புக்கு உகந்ததாக இருக்கும். எனவே, பல தலைமுறைகளாக அங்க மண் எடுத்து வரும் சூழலில் வருங்காலங்களிலும் அங்கு மண் எடுக்க அனுமதித்ததால் பயனாக இருக்கும் என மண்பாண்ட தொழிலாளர்கள் தெரிவித்தனர்.
26-Aug-2024