உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஆக்கிரமிப்பு கடைகள்; 2வது நாளாக அகற்றம்

ஆக்கிரமிப்பு கடைகள்; 2வது நாளாக அகற்றம்

பொள்ளாச்சி : பொள்ளாச்சி - வால்பாறை நெடுஞ்சாலையின் இருபுறங்களிலும், தற்காலிக மற்றும் நிரந்தர ஆக்கிரமிப்பு கடைகள், முழுமையாக அகற்றப்பட்டன.பொள்ளாச்சி நகர் மட்டுமின்றி, சுற்றுப்பகுதி நெடுஞ்சாலைகள் கடந்த சில மாதங்களுக்கு முன், விரிவாக்கப்பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இருப்பினும், சாலையின் இருபுறங்களிலும் அதிகரித்த ஆக்கிரமிப்பால், போக்குவரத்து நெரிசல் அதிகரித்தது.குறிப்பாக, சாலையோரத்தில், தள்ளுவண்டி கடைகள், தற்காலிக கடைகள் அமைத்து, வியாபாரம் செய்யப்பட்டது. அங்கு தாறுமாறாக நிறுத்தப்படும் வாகனங்களால், விபத்து மற்றும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டன.இதேபோல, சாலையை ஒட்டி வணிகக் கடைக்காரர்கள், நடைபாதை தாண்டி தங்களது கடைகளை விரிவுபடுத்தினர். இந்நிலையில், ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி, தனிநபர் ஒருவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். ஆக்கிரமிப்புகளை அகற்ற கோர்ட் உத்தரவிட்ட நிலையில், அதிரடியாக களம் இறங்கிய நெடுஞ்சாலைத் துறை அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள், ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.தொடர்ந்து, நேற்று இரண்டாவது நாளாக, சாலையோரங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டது. வால்பாறை வழித்தடத்தில், ஓம்பிரகாஷ் தியேட்டர் முதல் வஞ்சியாபுரம் வரையிலான சாலையோர ஆக்கிரமிப்புகள் முழுவதுமாக அகற்றப்பட்டன.கடைகளுக்கு முன் சாலையை ஆக்கிரமித்து போடப்பட்டிருந்த கான்கிரீட், சிமென்ட் தரைத்தளம் பொக்லைன் இயந்திரம் வாயிலாக இடித்து அகற்றப்பட்டது. முன்கூட்டியே எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்ததால், வியாபாரிகள் தாங்களே முன்வந்து பொருட்களை எடுத்துக் கொண்டதால், பெருமளவு சேதம் தவிர்க்கப்பட்டது.'சாலையொட்டிய பகுதியில் இனி ஆக்கிரமிப்பு செய்ய கூடாது. மீறினால், சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்,' என, நெடுஞ்சாலைத்துறையினர் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர். இதனால், அவ்வழித்தடம், நெரிசல் இன்றி அகலமாக காட்சியளித்தது.தன்னார்வலர்கள் கூறியதாவது:தற்காலிக மற்றும் நிரந்தர ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றினாலும், மீண்டும் ஆக்கிரமிப்பு செய்யப்படுவதைக் கண்டறிந்து தடுக்க வேண்டும். இதற்கென, நெடுஞ்சாலைத்துறையில் கண்காணிப்பு குழு அமைத்து, தொடர்ந்து கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.இதேபோல, சாலையை ஆக்கிரமிப்பு நிறுத்தப்படும் வாகன ஓட்டுநர்களுக்கு அபராதம் விதிக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை