உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / இரண்டாம் சுற்று நீர் திறப்புக்கு ஆலோசனை பி.ஏ.பி., விவசாயிகள் வலியுறுத்தல்

இரண்டாம் சுற்று நீர் திறப்புக்கு ஆலோசனை பி.ஏ.பி., விவசாயிகள் வலியுறுத்தல்

உடுமலை:சாகுபடி பணிகளை திட்டமிடும் வகையில், இரண்டாம் மண்டல பாசனம், இரண்டாம் சுற்று தண்ணீர் திறப்பு குறித்து ஆலோசனை பெற்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என பி.ஏ.பி., விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.உடுமலை திருமூர்த்தி அணையிலிருந்து பி.ஏ.பி., இரண்டாம் மண்டல பாசனத்துக்கு, கடந்த, ஆக., 18ல், தண்ணீர் திறக்கப்பட்டது. புதுப்பாளையம், கோமங்கலம், உடுமலை கால்வாயில், பாசன வசதி பெறும் பகுதிகளில், மக்காச்சோளம் அதிகளவு நடவு செய்யப்பட்டுள்ளது.வழக்கமாக, பாசனத்துக்கு அணையிலிருந்து தண்ணீர் திறக்கும் முன், மழைப்பொழிவு இருக்கும். அந்த ஈரப்பதத்தில், மக்காச்சோளம் நடவு செய்து, குறிப்பிட்ட நாட்கள் இடைவெளியில், பயிர்களுக்கு பாசன நீரை பாய்ச்சுவது வழக்கம்.இம்முறை, மழை இல்லாததால், பாசன நீர் திறந்தபிறகே, மக்காச்சோளம் நடவு செய்தனர்; மழை இல்லாததால், மண்ணில் ஈரப்பதம் குறைந்து, அதிக தண்ணீர் பாய்ச்ச வேண்டிய நிலை உருவானது.முதல் சுற்று தண்ணீர் நிறுத்தப்பட்ட பிறகும், மழை பெய்யவில்லை. இதனால், இரண்டாம் சுற்றுக்கு தண்ணீர் திறப்பு குறித்து, பொதுப்பணித்துறையினர் முறையாக திட்டமிட வேண்டும்.இது குறித்து ஆயக்கட்டு விவசாயிகள் கூறியதாவது: மண்டல பாசனத்துக்கு தண்ணீர் திறக்கும் முன், பொதுப்பணித்துறை, வேளாண்துறை, பாசன சபை மற்றும் விவசாயிகளை உள்ளடக்கிய ஆலோசனை கூட்டம் நடத்தப்படும்.இந்த நடைமுறை முறையாக பின்பற்றப்படுவதில்லை. மேலும், பிரதான கால்வாயில் இருந்து கிளை, பகிர்மான கால்வாய்களில் தண்ணீர் திறப்பு குறித்து விவசாயிகளுக்கு தகவல் தெரிவிக்கப்படும்; அப்போது, திருமூர்த்தி அணையின் நீர் இருப்பு, கிளை மற்றும் பகிர்மான கால்வாய் பாசன நாட்கள் குறித்து அறிவிக்கப்படும்.ஆனால், முதல் சுற்றில் தெளிவான தகவல் தெரிவிக்கப்படவில்லை. இரண்டாம் சுற்றுக்கு தண்ணீர் திறக்கவும், எவ்வித ஆலோசனைகளும் பெறப்படவில்லை.இதனால், நீர் நிர்வாகத்தில் குளறுபடிகள் ஏற்படும்; கடைமடைக்கு போதிய தண்ணீர் கிடைக்காமல், வளர்ச்சி தருணத்திலுள்ள பயிர்கள் பாதிக்கும்.எனவே, ஆயக்கட்டு விவசாயிகள், பொதுப்பணித்துறை மற்றும் பாசன சபையினரை ஒருங்கிணைத்து கூட்டம் நடத்தி, ஆலோசனைகளை பெற்று, தண்ணீர் திறக்க வேண்டும். மழை இல்லாததால், கூடுதல் நாட்கள் தண்ணீர் திறக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ