இலக்குகளை அடைய தேவையான குணநலன்கள்!
மழலையர்க்கு பட்டமளிப்பு
குனியமுத்துார், சரஸ்வதி ராமச்சந்திரன் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், மழலையர் வகுப்பு மாணவர்களுக்கான பட்டமளிப்பு விழா நடந்தது.சிறப்பு விருந்தினராக, இந்திய துப்பாக்கிச் சுடுதல் வீராங்கனை ஸ்ரீ நிவேதா பங்கேற்றார். விளையாட்டில் ஈடுபடுவதன் நன்மைகளை எடுத்துரைத்தார். தொடர்ந்து, மழலையர் வகுப்பு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி கவுரவித்தார். மாணவர்கள் கலைநிகழ்வுகளை அரங்கேற்றினர்.பள்ளியின் தாளாளர்கள் சந்தானகோபால், சுனிதா, அறங்காவலர்கள் ரவீந்திரன், கீதா, உமாராணி, அமுதா, முதல்வர் கருணாநிதி, துணை முதல்வர் யோகிதா, ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் பங்கேற்றனர். அன்னுார் நவபாரத் சர்வதேச பள்ளியில் கண்காட்சி
அன்னூர் நவபாரத் சர்வதேச பள்ளியில், பாடவாரியான கண்காட்சி நடந்தது.மாணவர்களின் படைப்பாற்றல் திறனை மேம்படுத்தவும், பாடவாரியாக ஆழ்ந்த கல்வியறிவு பெறவும், மாணவர்களே உருவாக்கிய பொருட்களைக் கொண்டு, கண்காட்சி நடந்தது. இதில் பள்ளி அறங்காவலர்கள் நந்தகுமார், சாமிநாதன் மற்றும் தங்கவேல் பங்கேற்றனர்.பள்ளி முதல்வர் பூங்கொடி, கண்காட்சியின் நோக்கம் குறித்து விளக்கினார். மாணவர்கள் தங்களுடைய பாடவாரியான செயல்திட்டத்தை காட்சிப்படுத்தி, விளக்கம் அளித்தனர்.இது மாணவர்களின் அர்ப்பணிப்பு, குழு உணர்வு மற்றும் ஒருமுக சிந்தனையை செயல்படுத்த கிடைத்த வாய்ப்பாக அமைந்தது என, ஆசிரியர்கள் தெரிவித்தனர். மாணவர்கள், பெற்றோர், ஆசிரியர்கள் பங்கேற்றனர். ஆதித்யா தொழில்நுட்ப கல்லுாரியில் பட்டமளிப்பு விழா
சத்தி ரோடு, குரும்பபாளையம் ஆதித்யா தொழில்நுட்பக் கல்லுாரியில், 12வது பட்டமளிப்பு விழா, கல்லுாரியின் தலைவர் சுகுமார் தலைமையில் நடந்தது. புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலையின் துணைவேந்தர் மோகன், 283 மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி கவுரவித்தார்.அவர் பேசுகையில், ''இலக்குகளை அடைய அறிவாற்றலுடன், தன்னம்பிக்கை, விடாமுயற்சி, சிக்கல் தீர்க்கும் திறன், ஆளுமை போன்ற குணநலன்களை, வளர்த்துக்கொள்ள வேண்டும்,'' என்றார்.முதல்வர் சோமசுந்தரேஸ்வரி கல்லுாரி ஆண்டு அறிக்கையை வாசித்தார். அறங்காவலர் பிரவீன் குமார், நிர்வாக அறங்காவலர் ஸ்ரீநிதி, இயக்குனர் ஜோசப் தணிக்கல், பேராசிரியர்கள், துறை தலைவர்கள், பெற்றோர்கள் பங்கேற்றனர். கற்பகம் கலை விழாவில் அசத்திய மாணவர்கள்
கற்பகம் நிகர்நிலைப் பல்கலை மாணவர்களுக்கான கலை விழா, 'ப்ரணயா -2025' என்ற பெயரில், இரு நாட்கள் நடந்தது.விழாவில், பதிவாளர் ரவி பேசுகையில், ''தனித்திறமைகளை வெளிப்படுத்துதல் மூலம் தாழ்வு மனப்பான்மை அகன்று, தன்னம்பிக்கை மற்றும் ஆளுமைத்திறன்கள் வளரும். தனித்திறன்களில் சிறந்து விளங்கும் மாணவர்கள், உடல் மற்றும் உள்ளத்திலும் புத்துணர்ச்சி பெறுவதால், கல்வியிலும் சிறந்து விளங்குவார்கள்,'' என்றார்.ஆடல், பாடல், இசை, ஓவியம், கைவினை, அழகுக்கலை, குறும்பட உருவாக்கம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடந்தன. வெற்றி பெற்றவர்களுக்கு கோப்பைகள் மற்றும் சான்றிதழ்களும், 2 லட்சம் ரூபாய் அளவிலான ரொக்கப்பரிசும் வழங்கப்பட்டது.