ரிப்போர்ட்டர் லீக்ஸ்
ஸ்கூல் ஆய்வக உதவியாளர்களுக்குஏதாவது வேலை கொடுங்க சார்!
உடுமலையில் உள்ள, அரசு பள்ளியில் பொதுத்தேர்வு நடப்பது குறித்து செய்தி சேகரிக்க சென்றிருந்தேன். பள்ளியில் இருந்த அலுவலக பணியாளர்கள், 'நம்மள மட்டும் ராத்திரி பகலா வேலை வாங்குறாங்க. ஆனா, சில செக் ஷன்ல இருக்கறவங்களுக்கு வேலையே கொடுக்கறதில்லைனு' பேசிக்கிட்டிருந்தாங்க. என்ன விஷயம்னு கேட்டேன்.அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகள்ல, கொஞ்ச வருசத்துக்கு முன்னாடி ஆய்வக உதவியாளர்கள அரசாங்கம் நியமிச்சுது. எட்டு ஆய்வக பாடவேளைய கருத்துல கொண்டு அதற்கு ஏற்ப, பணியாளர்கள நியமிச்சாங்க. ஆனா, பெரும்பான்மையான பள்ளிகள்ல நான்கு ஆய்வக பாடவேளைதான் இருக்குது.இப்ப என்ன விஷயம்னா, பொதுத்தேர்வு, தேர்தல் என எந்த வேலையா இருந்தாலும், பள்ளியில இருக்கிற பணியாளர்களும் பணிகளை இழுத்துபோட்டு பண்ணுறாங்க. ஆனா, ஆய்வக உதவியாளர்களுக்கு மட்டும் வேற எந்த பணியும் கொடுக்கறதில்ல.அதுக்கு ஏத்த மாதிரி, திருப்பூர் மாவட்டத்துல இருக்கிற கல்வித்துறை அதிகாரிங்களும் அலுவலக பணியாளர்கள் பற்றாக்குறையா இருக்கிற பள்ளிகள்ல கூட, ஆய்வக உதவியாளர்களுக்கு எந்த மாற்றுபணிகளும் கொடுக்கறதில்ல. ஆனா, அலுவலக பணியாளர்களுக்கு ராத்திரி, பகலா வேலை கொடுக்கறாங்க. இதுக்கெல்லாம் தீர்வு கிடைச்சா நல்லாயிருக்கும்னு, சொன்னாங்க. கொடுக்க வேண்டியத கொடுங்க...ஓட்டு போடுறத அப்புறம் பார்ப்போம்!
வால்பாறையில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ் சமுதாய வளைகாப்பு விழா, பொள்ளாச்சி எம்.பி., ஈஸ்வரசாமி தலைமையில் நடந்தது. விழாவில் பேசிய எம்.பி., அரசின் சாதனைகளை வரிசைப்படுத்தி பேசினார். அப்போது, 'கர்ப்பிணிகளுக்கு அரசின் சார்பில், 12 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. யாருக்கெல்லாம் கிடைத்தது என கை துாக்குங்கள்,' என்றார்.ஆனா, யாருமே கை துாக்கவில்லை. இதனால 'அப்செட்' ஆன எம்.பி., திட்ட அலுவலரிடம் இது குறித்து விசாரிக்க சொல்லி, சப்ஜெக்டை மாற்றி பேச ஆரம்பித்தாரு.தி.மு.க., நகர செயலாளர் சுதாகர் பேசறப்ப, 'உங்க வீட்டிலேயே உங்களுக்கு இப்படி ஒரு சீர்வரிசை செய்யவாங்களோ இல்லையோ, நாங்க உங்களுக்கு உரிமையா சீர்வரிசை செய்யறோம். அதனால மறக்காம வரும் தேர்தல்ல தி.மு.க.,வுக்கு ஓட்டுப்போடுங்கனு,' அரசு விழா மேடையிலேயே தேர்தல் பிரசாரம் பண்ண ஆரம்பித்தார்.நிகழ்ச்சிக்கு வந்திருந்த பெண்கள், பேசறதெல்லாம் நல்லாதான் பேசறீங்க. முதல்ல பிரசவத்துக்கு கொடுக்கற பணத்தையும், மகளிர் உரிமை தொகையையும் எல்லாருக்கும் கொடுங்க, அப்புறமா ஓட்டு போடறதா இல்லையான்னு முடிவு பண்ணுவோம்னு, ஆவேசமா கிளம்பினாங்க. செய்தி சேகரித்து விட்டு நாமும் அங்கிருந்து கிளம்பினோம். புதுசா நிர்வாகிகள் நியமிச்சாச்சுபா.ஜ.,வுல கோஷ்டி துவங்கியாச்சு
நண்பரை சந்திக்க கிணத்துக்கடவு பஸ் ஸ்டாண்ட் போயிருந்தேன். அங்கு, பா.ஜ.,வை சேர்ந்த சிலர் ஏதோ சண்டை போட்டுக்கிட்டு இருந்தாங்க. என்னன்னு காது கொடுத்து கேட்டேன்.கிணத்துக்கடவுல, பா.ஜ., கட்சி நிர்வாகிகளுக்கு புதுசா பொறுப்பு கொடுத்திருந்தாங்க. இத பத்தி பேச மீட்டிங் போட்டு இருந்தாங்க.கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கிட்ட கலந்து பேசாம, ஒரு சிலர் அவங்களே, மாவட்ட தலைமை கிட்ட பேசி பொறுப்பெல்லாம் வாங்கிட்டாங்க. இதனால, கட்சிக்காரர்களுக்குள்ள சண்டை வந்துச்சு.அது எப்படி எங்கள கேட்காம போஸ்டிங் கொடுத்தாங்க. இங்க வருஷ கணக்குல கட்சிக்காக வேலை செஞ்சவங்க நிறைய பேர் இருக்காங்க. அவங்களுக்கு போஸ்டிங் கொடுக்காம நீங்க மட்டும் எப்படி போஸ்டிங் வாங்கலாம்.இதனால, கட்சியில ரெண்டு கோஷ்டியாயிருச்சு. இந்த பிரச்னையால ஒருவர் கட்சியிலிருந்து விலகி அ.தி.மு.க.,க்கு ஓடிட்டாரு. கட்சி வளர்ந்து வர்ற நேரத்துல இப்படி பண்ணினா, கட்சிக்காரங்க சும்மா இருப்பாங்களா. மாவட்ட தலைமை இந்த பிரச்னைய சமரசம் செய்யணும். இல்லைனா, தேர்தல் நேரத்துல வேலை செய்யறதுக்கு ஆள் இருக்காதுனு, காரசாரமா பேசிட்டு இருந்தாங்க. பள்ளிக்கூடத்துக்கு ஒதுக்குறமின் கட்டண நிதி போதாது!
பொள்ளாச்சி பள்ளிக்கல்வித்துறை அலுவலகத்துக்கு செய்திக்காக சென்றிருந்தேன். அங்கு, பள்ளி தலைமையாசிரியர்கள் சிலர் மின் கட்டண பிரச்னைனு பேசிக்கிட்டு இருந்தாங்க. என்ன பிரச்னைனு கேட்டேன்.பொள்ளாச்சி கல்வி மாவட்டத்துல இருக்கற அரசு பள்ளிகளுக்கு ஏற்ப, மின் கட்டண தொகைய ஒதுக்கீடு செய்யறாங்க. குறிப்பாக, ஹைடெக் லேப் இருக்கற அரசு மேல்நிலைப் பள்ளிகளுக்கு கிராமப்புறமாக இருந்தா 50 ஆயிரம் ரூபா; நகர்ப்புறமாக இருந்தா, 70 ஆயிரம் ரூபா மின் கட்டணத்துக்கு ஒதுக்கீடு செய்யறாங்க.ஆனா, இப்பள்ளியில, 'த்ரீ பேஸ்' இணைப்பு கொண்ட மோட்டார் பயன்பாடு, ஒரே நேரத்தில் பத்துக்கும் மேற்பட்ட கம்ப்யூட்டர் பயன்பாடு, கிளாஸ் ரூம்ல வகுப்பறையில் மின் விசிறி மற்றும் லைட் என இரு மாதங்களுக்கு ஒரு முறை பதினாறாயிரம் ரூபா முதல், 20 ஆயிரம் ரூபா மின் கட்டணம் செலவாகிறது.ஆண்டுக்கு ஆறு முறை மின் கட்டணம் செலுத்தினாலும், ஒரு லட்சம் ரூபாய்க்கு அதிகமாக செலவாவதால் அரசு நிர்ணயிக்கும் தொகை மிகவும் குறைவாகவே இருக்கு. பள்ளி மேம்பாட்டுக்கான நிதில இருந்து மின் கட்டணம் தொகை செலுத்த வேண்யிருக்கு என தலைமை ஆசிரியர்கள் புலம்பினர். போதை பொருளுக்கு தட்டுப்பாடில்லஉடனே தடுக்கலைனா அவ்ளோதான்!
பொள்ளாச்சியில், நண்பர் ஒருவருடன் பேசியபடியே நடந்து சென்றேன். இளைய சமுதாயம் எங்க போகுதுனு தெரியலப்பா என ஆதங்கமாக பேச ஆரம்பித்தார். என்னாச்சுன்னு கேட்டேன். அவர் சொன்னதில் இருந்து...சமீபத்தில் போலீசார், போதையில் தகராறு செய்த கல்லுாரி மாணவர்களை கைது பண்ணினாங்க. சிலரை, கஞ்சா வைத்து இருந்ததற்காக கைது பண்ணிணாங்க.இத பார்க்கறப்ப அவங்களுக்கு மட்டும் எப்படி இது எல்லாம் தட்டுப்பாடின்றி கிடைக்குதுனு சந்தேகம் வருது.கேரளா மற்றும் வெளியூர்ல இருந்து வாங்கி வந்து சிலர் விற்பனை பண்ணுறாங்க. அவங்களும் பயன்படுத்துறாங்க. இத ஏன் தடுக்க முடியல.கஞ்சா, போதை மாத்திரை, மது, புகையிலை பொருட்களுக்கு அடிமையாகும் இளைஞர்கள், எதிர்காலத்தை தொலைச்சுட்டு நிற்குறாங்க. கொஞ்ச காலம் கட்டுப்பாட்டில் இருந்த இவை, மீண்டும் புழக்கத்துக்கு வந்திருச்சு. இதை தடுக்க போலீசார் தீவிர ரோந்து போகணும்.இளைஞர்கள், மாணவர்கள நல்வழிப்படுத்த கல்லுாரி, பள்ளி நிர்வாகத்தோடு இணைந்து குழு அமைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தணும். எங்க இருந்து இவங்களுக்கு சப்ளை செய்யறாங்கனு கண்டுபிடிச்சு தடுக்கணும். போலீசாரும், 'கவனிப்பு' வாங்கிட்டு, இதையெல்லாம் அனுமதிக்காம, உறுதியா இருக்கணும்னு, ஆதங்கத்தை கொட்டினார்.
மாவட்டம் வரும் பின்னே... கோஷ்டி உருவாகுது முன்னே!
பழநி மாவட்டம் உருவாகறதுக்கு முன்னாடி, நம்ம கட்சில மறுபடியும் பல கோஷ்டிங்க உருவாயிரும் போல, என, ஆளுங்கட்சி உடன்பிறப்புகள், உடுமலை அண்ணா பூங்கா மரத்தடியில் புலம்பி கொண்டிருந்தனர்.வெயிலுக்கு ஒதுங்கிய நாமும், அவங்க உரையாடலை கவனித்தோம். பழநி மாவட்டத்துல நம்ம ஏரியாவை சேர்க்க போறாங்கன்னு சொன்னதும், நம்ம கட்சியிலேயே பல குழப்பம் துவங்கிருச்சு. ஏற்கனவே தாராபுரம் டீம், உள்ளூர் டீம்னு தனித்தனியா இயங்கிட்டு இருக்காங்க. புது மாவட்டம் உருவாச்சுனா, பழநி, ஒட்டன்சத்திரம் டீமும் வந்துரும்.சமூக வலைதளத்துல, நம்ம கட்சிக்காரங்களே, பழநி மாவட்டத்துக்கு ஆதரவு தெரிவிச்சும், எதிர்ப்பு தெரிவிச்சும், சண்டை கட்டிக்கிறாங்க. சிலர், மாவட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிச்சு, கையெழுத்து இயக்கம் எல்லாம் நடத்துறாங்க.ஒரு சிலர், பழநி மாவட்டம் அறிவிப்பு வந்ததும், எங்க கைதான் உயர போகுது; எங்க ஆதரவாளர்தான் தொகுதி வேட்பாளரா இருப்பாங்கனு பேச ஆரம்பிச்சுட்டாங்க.ஆனா, மக்களோட மனநிலையை தெரிஞ்சுக்க யாரும் தயாராக இல்லை. எப்படியோ எலக் ஷன் வந்தா, ரெண்டு தொகுதியிலும், மக்களை வேற விதமாக சமாளிச்சுக்க முடிவு பண்ணிட்டாங்க போல. மக்கள் அதிருப்தியை நேரடியாக சந்திக்கிற நம்மள மாதிரி அடிமட்ட தொண்டர்கள் நிலைமைதான் என்ன ஆக போகுதுன்னு தெரியல; கட்சி தலைமையும் கண்டுக்கறது இல்லைனு புலம்பியபடி நகர்ந்து சென்றனர்.