| ADDED : மார் 29, 2024 12:21 AM
மேட்டுப்பாளையம்;'திருப்பூர் கூட்டு குடிநீர் திட்டத்திலிருந்து, ஆறு ஊராட்சிகளுக்கும் குடிநீர் வழங்க வேண்டும் என, ஊராட்சி தலைவர்கள் கோரிக்கை விடுத்தனர். பவானி ஆற்றில் நீர்வரத்து குறைந்ததால், கடந்த நான்கு நாட்களாக மூளையூர் நீரேற்று நிலையத்திலிருந்து, ஊராட்சிகளுக்கு தண்ணீர் பம்பிங் செய்யவில்லை.இந்த நிலையில், காரமடை வட்டார வளர்ச்சி அலுவலகத்தில், அதிகாரிகள், ஊராட்சி தலைவர்கள் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கூடுதல் கலெக்டர் சுவேதா சுமன் தலைமை வகித்தார். கூட்டத்தில், பவானி ஆற்றில் நீர்வரத்து முற்றிலும் குறைந்ததால், மூளையூர் நீரேற்று நிலையத்திலிருந்து தண்ணீர் பம்பிங் நடைபெறவில்லை. மேலும் ஆற்றில் வரும் தண்ணீருடன், மேட்டுப்பாளையம், சிறுமுகை நகரின் ஒட்டுமொத்த கழிவுநீர் மற்றும் ஏழு எருமை பள்ளத்தில் வரும் கழிவு நீர், மூளையூர் நீரேற்று நிலையத்தில், தண்ணீர் எடுக்கும் இடத்தில் தேங்கியுள்ளது. இந்த தண்ணீரை எடுத்து, சுத்தம் செய்து பொதுமக்களுக்கு வழங்கப்படுகிறது. இரண்டு நாட்களுக்கு மேல் தண்ணீரை இருப்பு வைத்தால், புழுக்கள் உருவாகிறது. இந்த தண்ணீரை குடிக்கும் பலர் உடல்நலம் பாதித்துள்ளனர். எனவே ஆறு ஊராட்சிகளுக்கும், திருப்பூர் கூட்டுக் குடிநீர் திட்டத்திலிருந்து, குடிநீர் வழங்க வேண்டும். இவ்வாறு ஊராட்சி தலைவர்கள் கோரிக்கை விடுத்தனர். ஊராட்சி தலைவர்களின் கோரிக்கையை ஏற்று, விரைவில் திருப்பூர் குடிநீர் திட்டத்திலிருந்து குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என கூடுதல் கலெக்டர் கூறினார்.