பாலாஜி கோவில் ரோட்டை விரிவுபடுத்த கோரிக்கை
வால்பாறை; வால்பாறையில், பாலாஜி கோவில் செல்லும் ரோட்டை விரிவுபடுத்த வேண்டும், என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.வால்பாறை அடுத்துள்ளது, கருமலை பாலாஜி கோவில். பிரசித்தி பெற்ற இந்த கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். இது தவிர, இங்குள்ள கருமலை வேளாங்கண்ணி மாதா ஆலயம், இறைச்சல்பாறை நீர்வீழ்ச்சி, அக்காமலை உள்ளிட்டவைகளை கண்டு ரசிக்க சுற்றுலா பயணியர் அதிகளவில் வாகனங்களில் வருகின்றனர்.வால்பாறை நகரில் இருந்து, 10 கி.மீ., தொலைவில் உள்ள கருமலை பாலாஜி கோவில் செல்லும் ரோட்டில், பல இடங்கள் விரிவுபடுத்தப்படாமல் உள்ளது. இதனால், அடிக்கடி வாகன விபத்தும் ஏற்படுகிறது.பொதுமக்கள் கூறியதாவது:வால்பாறை நகரில் இருந்து, நடுமலை, பச்சமலை வழியாக கருமலை செல்லும் ரோட்டில் குடிநீர் குழாய் பதிப்பதற்காக தோண்டப்பட்ட குழி, மூடப்படாமல் உள்ளது. இதனால் வாகனங்கள் செல்ல முடியாத நிலை உள்ளது.மேலும், சுற்றுலா வாகனங்கள் அதிகளவில் பயன்படுத்தும், கருமலை ரோட்டை விரிவுபடுத்தவும், தேவையான இடங்களில் வேகத்தடை அமைக்கவும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மழை காலம் துவங்குவதற்கு முன்னதாக ரோடு விரிவாக்கப்பணி மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு, கூறினர்.